உப்பாறு அணை அருகே 400 ஆண்டு பழமையான நடுகல் கண்டெடுப்பு


உப்பாறு அணை அருகே 400 ஆண்டு பழமையான நடுகல் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 28 Aug 2019 4:45 AM IST (Updated: 27 Aug 2019 8:04 PM IST)
t-max-icont-min-icon

உப்பாறு அணை அருகே 400 ஆண்டு பழமையான நடுகல் கண்டெடுக்கப்பட்டது.

திருப்பூர்,

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்த கொங்கு மண்டல மக்கள் கி.பி. 10–ம் நூற்றாண்டில் வேளாண்மையில் ஆர்வம் காட்டினர். இதனால் ஓரிடத்தில் தங்கி வேளாண்மை செய்யும் முறைக்கு மாறினர். கொங்கு சோழ மன்னன் வீரராசேந்திரன் காலத்தில் நொய்யல் ஆற்றின் இருபுறமும் நெல் அதிகமாக விளைந்தது. கி.பி. 16–ம் நூற்றாண்டில் தரிசு நிலங்களை வேளாண்மைக்கு பயன்படும் வகையில் சமன்செய்து சீராக்கி கம்பு, எண்ணெய் வித்துகள், கடுகு, தென்னை, வாழை, இஞ்சி போன்றவை பயிர் செய்யப்பட்டன.

வேளாண்மைக்கு நீர்ப்பாசனம் இன்றியமையாததாக இருந்ததால் புதியதாக குளம், குட்டை, ஏரிகள், கால்வாய்கள் என நீர்ப்பாசன அமைப்புகளை ஏற்படுத்தினர். இதனால் வேளாண்மை பெருகியதுடன் வேளாண் பொருட்களை உழவர்களிடமிருந்து விலைக்கு வாங்கி மக்களுக்கு விற்கும் வணிகர்கள் எழுச்சி பெற்றனர். மக்கள் வேளாண்மையில் ஈடுபட வரி நீக்கம் செய்தனர். பல ஊர்களைத் தேவதானமாக அளித்து வேளாண் வளத்தைப் பெருக்கினர். வேளாண் தொழிலுக்கு வரி தானியமாகவே பெறப்பட்டது.

இந்த நிலையில் திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த இயக்குனர் சு.ரவிக்குமார் மற்றும் க.பொன்னுச்சாமி, ரா.குமரவேல், பேராசிரியர் ச.மு.ரமேஷ்குமார் மற்றும் சு.வேலுச்சாமி ஆகியோர் குண்டடம் உப்பாறு அணை அருகே கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 400 ஆண்டு பழமையான நடுகல் ஒன்றை கண்டெடுத்தனர்.

இந்த நடுகல் குறித்து சு.ரவிக்குமார் மேலும் கூறியதாவது:–

பண்டைய கொங்கு மண்டலத்தில் கோவிலுக்கு நிலம் தானமாக கொடுத்தவர்களுக்கும், வேளாண்மை வளர்ச்சிக்காக புதிதாக குளம், குட்டை, ஏரிகள் மற்றும் கால்வாய்களை ஏற்படுத்தியவர்களுக்கும் தங்கள் ஆளுமையில் இருந்த வேளாண் நிலத்துக்கு வரி நீக்கம் செய்தவர்களுக்கும் நடுகல் எடுத்து வழிபடும் வழக்கம் இருந்துள்ளது.

இவ்வாறு எடுக்கப்பட்ட நடுகல் தான் நமக்கு இங்கே கிடைத்துள்ளது. 110 செ.மீ. அகலமும் 85 செ.மீ. உயரமும் கொண்ட இந்த நடுகல்லில் 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் சிற்பங்கள் உள்ளன. வலது பக்கத்தில் உள்ள வீரன் தன் இடது கையை இடுப்பில் வைத்து, வலது கையில் உள்ள நீண்ட வாளை தரையில் ஊன்றியபடி காட்சியளிக்கிறார். இடையில் உள்ள வீரன் தன் இருகைகளிலும் உள்ள ஆயுதத்தை நிலத்தில் ஊன்றியபடி உள்ளார். இவர்கள் இருவரும் தந்தை–மகனாக இருக்கலாம்.

இடது ஓரத்தில் உள்ள பெண் தன் இடதுகையை இடுப்பில் வைத்தபடி, வலது கையில் பூச்செண்டை உயர்த்திய நிலையிலும் உள்ளார். இப்பெண்ணுக்கு அருகில் ஒரு குழந்தை தன் தாயைத் தன் இடது கையில் பிடித்தபடியும், வலது கையைத் தொங்க விட்ட நிலையிலும் உள்ளது. பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் ஒரு குடுவையும் உள்ளது. மூவரும் இடையில் மட்டும் நல்ல வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடை அணிந்து, காதில் காது அணிகலன்களும், கழுத்தில் கண்டிகை, சரப்பளி, சவடி வகை அணிகலன்கள் அணிந்து கம்பீரமாக காட்சி அளிக்கின்றனர்.

இவர்கள் குடும்பம் அந்தப் பகுதியில் அதிகாரம் செய்து வந்த போது பல தானங்களை கோவில்களுக்கும், வேளாண் வளர்ச்சிக்கும் செய்து இருக்கலாம். இவர்கள் செய்த தானங்கள் இவ்வுலகில் சந்திர, சூரியர் உள்ளவரை நீடித்து நிலைக்க வேண்டும் என்பதற்காக நடுகல்லின் பின்புறத்தில் சந்திர, சூரியர் முத்திரைகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நடுகல்லில் எழுத்துப் பொறிப்பு இல்லை. எனவே சிலை அமைப்பை வைத்துப் பார்க்கும்போது இந்த நடுகல் சுமார் 400 ஆண்டுகள் பழமையானதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story