பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடு; சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம்


பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடு; சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 28 Aug 2019 4:00 AM IST (Updated: 27 Aug 2019 9:25 PM IST)
t-max-icont-min-icon

கமுதியில் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கமுதி,

கமுதி குண்டாற்று பகுதியில் ஏற்கனவே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதனால் பவுண்டு தெரு, மேட்டுத்தெரு உள்பட 20-க்கும் மேற்பட்ட தெருக்களை சேர்ந்தவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதையடுத்து இந்த கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சார்பிலும், பொது சேவை நிறுவனங்கள் சார்பிலும் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சிங்கப்புளியாபட்டி அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையையும் குண்டாற்று கரைக்கு மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களும், தன்னார்வ அமைப்புகளும் கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்ததுடன் புதிதாக கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது அதிகாரிகளும் அப்பகுதியில் புதிதாக கடை அமைக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்தனர். ஆனால் தற்போது குண்டாற்றில் டாஸ்மாக் கடை அமைக்க மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தாசில்தார் மற்றும் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் இந்த கடை இப்பகுதியில் அமைந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை உருவாகும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு குண்டாற்றில் மதுக்கடை அமைப்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story