தேனி அருகே, கண்மாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - 15 ஏக்கர் மீட்பு


தேனி அருகே, கண்மாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - 15 ஏக்கர் மீட்பு
x
தினத்தந்தி 28 Aug 2019 4:15 AM IST (Updated: 27 Aug 2019 10:47 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுமார் 15 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

தேனி,

தேனி அருகே பூதிப்புரத்தில் ராஜபூபாலசமுத்திரம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் சுமார் 121 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பல ஆண்டுகளாக இந்த கண்மாய் தூர்வாரப்படாமல் புதர்மண்டிக் காணப்பட்டது. மேலும், கண்மாயில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வந்தன. கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்து பலர் விவசாயம் செய்து வந்தனர்.

இதையடுத்து தமிழக அரசு இந்த கண்மாயை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரி புனரமைக்க ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்தது. அதன்படி, குடிமராமத்து திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. கண்மாய் கரைகளை உயர்த்தி பலப்படுத்தப்பட்டு உள்ளன. நீர்வரத்து வாய்க்கால் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார். அதன்படி, போடி தாசில்தார் மணிமாறன் தலைமையில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக வருவாய்த்துறை அலுவலர்கள், போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். கண்மாயை ஆக்கிரமிப்பு செய்து பயிர் சாகுபடி, வயல் வரப்புகள் அமைத்து இருந்தன. பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அதற்குள் ஆக்கிரமிப்பு செய்து இருந்த பலர் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்வதாக தெரிவித்தனர். அதன்படி அவர்கள் சாகுபடி செய்த பயிர்களை அறுவடை செய்தனர். கண்மாய் பரப்பளவு நிலஅளவீடு செய்து, ஆக்கிரமிப்பு பகுதிகளில் கரை அமைக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 15 ஏக்கர் பரப்பளவிலான நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.


Next Story