சென்னம்பட்டி வனப்பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா? கண்காணிக்க ஊழியர்களுக்கு மாவட்ட வன அதிகாரி உத்தரவு


சென்னம்பட்டி வனப்பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா? கண்காணிக்க ஊழியர்களுக்கு மாவட்ட வன அதிகாரி உத்தரவு
x
தினத்தந்தி 28 Aug 2019 3:30 AM IST (Updated: 28 Aug 2019 12:11 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டை வனப்பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என்பதை தீவிரமாக கண்காணிக்க ஊழியர்களுக்கு மாவட்ட வன அதிகாரி விஸ்மிஜூ விஸ்வநாதன் உத்தரவிட்டு உள்ளார்.

அம்மாபேட்டை,

அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி வனச்சரக அலுவலகத்தில் வனத்துறை ஊழியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வன அதிகாரி விஸ்மிஜூ விஸ்வநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னம்பட்டி வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலர்களாக 21 பேர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் யானை, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த வனப்பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கோடை காலங்களில் வனப்பகுதியில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீத்தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும். வனப்பகுதியையொட்டி வசிக்கும் பொதுமக்களுக்கு வனவிலங்குகளால் ஏற்படும் இடையூறுகளை வனத்துறையினர் தீர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் வனச்சரகர் செங்கோட்டையன், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து சென்னம்பட்டி வனச்சரகத்துக்கு உள்பட்ட கொமராயனூர் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள், புதிதாக அமைக்கப்பட உள்ள குடிநீர் குட்டைகள், வனக்காவலர்களுக்கான பயிற்சி இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story