நாட்டு துப்பாக்கியால் சுட்டு விலங்குகளை வேட்டையாடியவர் குண்டர் சட்டத்தில் கைது


நாட்டு துப்பாக்கியால் சுட்டு விலங்குகளை வேட்டையாடியவர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 28 Aug 2019 4:00 AM IST (Updated: 28 Aug 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாட்டு துப்பாக்கியால் சுட்டு விலங்குகளை வேட்டையாடியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்றார்கள். அப்போது வனப்பகுதியில் உள்ள ஒரு பாறையில் 7 பேர் கொண்ட கும்பல் மான் இறைச்சியை காயவைத்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களை வனத்துறையினர் சுற்றிவளைத்தனர். அப்போது ஒருவர் மட்டும் சிக்கிக்கொண்டார். மற்ற 6 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டார்கள்.

பிடிபட்டவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தியபோது, அவர் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த குட்டி வீரப்பன் என்கிற சரவணன் என்றும், இவர் மேலும் 6 பேருடன் சேர்ந்து நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி 4 மான்களை வேட்டையாடி இறைச்சியை கடத்துவதற்காக பாறையில் காயவைத்ததும் தெரிந்தது. இதைத்தொடர்ந்து குட்டிவீரப்பனை கைது செய்த வனத்துறையினர் அவரை பவானி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோபி மாவட்ட சிறையில் அடைத்தார்கள்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட குட்டி வீரப்பன் மீது ஏற்கனவே ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் நாட்டு துப்பாக்கியால் சுட்டு விலங்குகளை வேட்டையாடியதாக 10 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே சேலம் மாவட்ட வனப்பகுதியில் யானையை நாட்டுதுப்பாக்கியால் சுட்டு தந்தங்களை கடத்தியதாக கோபி கிளை சிறையில் இருந்த சரவணனை சேலம் மாவட்ட வனத்துறையினர் கைது செய்து, அங்குள்ள மத்திய சிறைக்கு கொண்டு சென்றார்கள்.

இதைத்தொடர்ந்து சரவணன் மீது வனவிலங்குகள் வேட்டையாடியது தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவனுக்கு ஈரோடு மாவட்ட வன அதிகாரி விஸ்மிஜூ விஸ்வநாதன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் சரவணனை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் கதிரவன் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு தற்போது சரவணன் அடைக் கப்பட்டு இருக்கும் சேலம் மத்திய சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story