திருவெண்ணெய்நல்லூர் அருகே, 2 வீடுகளில் ரூ.5 லட்சம் நகை- பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருவெண்ணெய்நல்லூர் அருகே 2 வீடுகளில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.மழவராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார் (வயது 56), விவசாயி. இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.
நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 2 பேர், சுகுமார் வீட்டின் பின்பக்க கதவு தாழ்ப்பாளை நெம்பி திறந்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடினர். பின்னர் அங்கு தூங்கிக்கொண்டிருந்த சுகுமாரின் மனைவி சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்தனர்.
உடனே தூக்கத்தில் இருந்து எழுந்த சாந்தி, திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இவருடைய அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்களும் மற்றும் அக்கம், பக்கத்தில் இருந்தவர்களும், அந்த மர்ம நபர்களை மடக்கிப்பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இதேபோல் சுகுமார் வீட்டின் அருகில் உள்ள தண்டபாணி (55) வீட்டின் பின்பக்க கதவு தாழ்ப்பாளையும் நெம்பி திறந்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.9 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீடுகளில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். 2 வீடுகளிலும் திருட்டுப்போன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சமாகும்.இதுகுறித்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story