ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பரிதாபம்: 3 வயது ஆண் குழந்தை கொலை? 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பரிதாபம்: 3 வயது ஆண் குழந்தை கொலை? 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை
x
தினத்தந்தி 28 Aug 2019 4:15 AM IST (Updated: 28 Aug 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் 3 வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் 8-ம் வகுப்பு மாணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது மம்சாபுரம். இங்குள்ள கிருஷ்ணசாமிநாயுடு தெருவை சேர்ந்தவர் ரவி. கூலி தொழிலாளி. இவருக்கு பூவரசன்(வயது 6), முகேஷ்குமார் (3) என்ற 2 மகன்கள். இந்த நிலையில் முகேஷ்குமாரை நேற்று மதியம் 1 மணி முதல் காணவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் குழந்தையை பல இடங்களில் தேடி வந்தனர். ஆனால் குழந்தையை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனால் பதற்றம் அடைந்த ரவியின் உறவினர்கள் குழந்தை எங்கு இருந்தான்? யார் எல்லாம் குழந்தையுடன் இருந்தார்கள் என்று விசாரித்தனர். அப்போது, 8-ம் வகுப்பு மாணவன் ஒருவன் குழந்தை முகேஷ்குமாரிடம் விளையாடியது தெரியவந்தது. ஆனால் அந்த மாணவன் அங்கு இல்லை.

ரவியின் உறவினர்கள் அந்த 8-ம் வகுப்பு மாணவனை தேடினர். அப்போது அந்த மாணவன் அதே பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு இடத்தில் குழந்தை முகேஷ்குமார் பேச்சு, மூச்சு இன்றி பிணமாக கிடந்துள்ளான்.

இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற குழந்தையின் தந்தை ரவி, குழந்தையை கையில் தூக்கிகொண்டு என் குழந்தையை அந்த பையன் கொன்றுவிட்டான் என்று கதறிய படி வந்துள்ளார். குழந்தையின் உடலில் எவ்வித காயமும் இல்லை என்று கூறப்படுகிறது. பின்னர் குழந்தையின் உடலை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மம்சாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் இருந்த சிலரை மம்சாபுரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது குழந்தையுடன் கடைசியாக இருந்த 8-ம் வகுப்பு மாணவனிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது அந்த மாணவன், குழந்தையின் மரணத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், குழந்தையின் மரணம் குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்றும் கூறியுள்ளான்.

குழந்தைக்கு சாக்லெட் வாங்கி கொடுக்க சென்றதாகவும், சாக்லெட் வாங்கி வருவதற்குள் குழந்தை இறந்து விட்டதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் தன்னிடம் கூறியதாகவும் கூறி உள்ளான். இதனால் போலீசாரின் முதல் கட்ட விசாரணையின் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பதற்றம் உருவானதால் மம்சாபுரம் பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் அங்கு விரைந்து விசாரணை மேற்கொண்டார். குழந்தை முகேஷ்குமாரின் உடல் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளதால் அங்கு அவரது உறவினர்கள் திரண்டு வந்து, கதறி அழுதபடி இருந்தனர்.

குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்த பின்னர் தான் மரணம் குறித்த உண்மை நிலை தெரியவரும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 3 வயது குழந்தை மர்மமான முறையில் பிணமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story