குடிமராமத்து திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


குடிமராமத்து திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 28 Aug 2019 4:15 AM IST (Updated: 28 Aug 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார்.

பொன்னமராவதி,

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் உத்தரவின்படி, நீர் ஆதாரங்களை சீரமைத்து அதன் மூலம் மழைநீரை சேமித்து நிலத்தடி நீரை மேம்படுத்தவும், நீர் பயன்பாட்டை முறையாக ஒழுங்கு படுத்தவும், முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் குடிமராமத்து பணிகள் விவசாய பாசனத்தாரர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை பொதுப்பணித்துறையின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2019-20-ம் ஆண்டிற்கு 66 பணிகள் ரூ.20 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்அடிப்படையில் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், வேகுப்பட்டி ஊராட்சி, பொன்னமராவதி கிழக்கு கிராமத்தில் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சின்னணி கண்மாய் தூர் வாரும் பணியையும், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அளவளந்தான் கண்மாய் தூர் வாரும் பணியையும், சுந்தரசோழபுரம் ஊராட்சி, சுந்தரசோழபுரத்தில் சுந்தரம் பெரிய கண்மாய் தூர் வாரும் பணி என மொத்தம் ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து திட்டப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இந்த ஆய்வின் போது கரைகளை பலப்படுத்துதல், மடைகளை மறுசீரமைப்பு செய்தல், பாசன வாய்க்கால்களை தூர் வாருதல் போன்ற பணிகளை உரிய முறையில் மேற்கொண்டு விரைவில் பணிகளை முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த ஆய்வில் பொன்னமராவதி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ராஜராஜன், பாசனத்தாரர்கள் உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story