அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை ஆவணங்கள் ஐகோர்ட்டில் தாக்கல்


அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை ஆவணங்கள் ஐகோர்ட்டில் தாக்கல்
x
தினத்தந்தி 28 Aug 2019 4:30 AM IST (Updated: 28 Aug 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை ஆவணங்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

மதுரை,

மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தனது பதவியை தவறாக பயன்படுத்தி கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். இதுகுறித்து அவர் மீது நடவடிக்கை கோரி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மனு அனுப்பியும் பலன் இல்லை. எனது மனு அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த 1996-ம் ஆண்டில் திருத்தங்கல் பேரூராட்சி துணைத்தலைவராக பதவி வகித்ததில் இருந்து தற்போது வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துகள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டது.

ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில், “சொத்து குவிப்பு புகாரின் மீதான விசாரணை அடிப்படையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மேல்நடவடிக்கை கைவிடப்பட்டது” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து ராஜேந்திரபாலாஜி மீதான புகார் குறித்த விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக பொதுத்துறை செயலாளர் சார்பில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு புகார் தொடர்பான ஆவணங்கள் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கை அடுத்த மாதம் 25-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Next Story