மயிலாடுதுறை பகுதியில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்


மயிலாடுதுறை பகுதியில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 28 Aug 2019 4:30 AM IST (Updated: 28 Aug 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை பகுதியில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி, சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை,

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் உள்ள கோர்ட்டு முன்பு வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாயூரம் வக்கீல்கள் சங்க தலைவர் ராமசேயோன் தலைமை தாங்கினார். மயிலாடுதுறை வக்கீல்கள் சங்க தலைவர் வேலு குபேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் வக்கீல்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சீர்காழி

சீர்காழியில் உள்ள கோர்ட்டு முன்பு வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் தியாகராஜன், இணை செயலாளர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வக்கீல்கள் சுந்தரையா, பாலாஜி, கார்த்திக், ராஜேஷ், ராம்குமார், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி

மயிலாடுதுறையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில குழு உறுப்பினர் இடும்பையன் தலைமை தாங்கினார். இதில் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்தும், சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் சர்புதீன், ஒன்றிய பொறுப்பு செயலாளர் இமானுவேல், நகர துணை செயலாளர் மனோன்ராஜ், நகர இளைஞர் அணி செயலாளர் பிரதீப், ஒன்றியக்குழு உறுப்பினர் மோகன், மகளிர் சங்க பொறுப்பாளர்கள் ரேவதி, வெள்ளையம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலை மறியல்

அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்தும், சிலையை சேதப்படுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று பூம்புகார்-தருமகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கீழையூர் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென பூம்புகார்-மயிலாடுதுறை மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இதில் கட்சியின் முகாம் அமைப்பாளர் சுபாஷ், முன்னாள் ஊராட்சி உறுப்பினர் தவமணி, கிராம பொறுப்பாளர் சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பூம்புகார் போலீசார், மேற்கண்ட இடத்திற்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story