ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி உப்பள தொழிலாளியிடம் நூதன முறையில் ரூ.30 ஆயிரம் அபேஸ் - 2 பேருக்கு வலைவீச்சு
ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி, உப்பள தொழிலாளியிடம் நூதன முறையில் ரூ.30 ஆயிரத்தை அபேஸ் செய்த 2 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆறுமுகநேரி,
ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் குணசேகர் (வயது 50). உப்பள தொழிலாளி. இவருடைய மனைவி தங்கம். இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. 2-வது மகள் தலைபிரசவத்துக்காக பெற்றோரின் வீட்டுக்கு வந்துள்ளார். மகளின் ஆஸ்பத்திரி செலவுக்காக தங்கம், ஆறுமுகநேரியில் உள்ள தனியார் வங்கியில் தனது சேமிப்பு கணக்கில் ரூ.30 ஆயிரம் சேமித்து வைத்து இருந்தார்.
நேற்று முன்தினம் மதியம் தங்கம் தன்னுடைய கணவரிடம் தனது ஏ.டி.எம். அட்டையை கொடுத்து, ஏ.டி.எம். மையத்தில் சென்று ரூ.2,700 எடுத்து வருமாறு கூறினார். அப்போது அவர், ஒரு தாளில் தனது ஏ.டி.எம். அட்டையின் பாஸ்வேர்டு எண்ணையும் எழுதி கொடுத்தார். மனைவியிடம் ஏ.டி.எம். அட்டை, பாஸ்வேர்டு எண்ணை பெற்று கொண்ட குணசேகர், ஆறுமுகநேரி மெயின் பஜாரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் தீர்ந்து போனதாக அங்குள்ள காவலாளி தெரிவித்தார்.
இதையடுத்து குணசேகர், ஆறுமுகநேரி மெயின் பஜாரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். அப்போது அங்குள்ள 2 ஏ.டி.எம். எந்திரங்களிலும் 2 மர்மநபர்கள் பணம் எடுப்பது போன்று நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் குணசேகர் தனது ஏ.டி.எம். அட்டை, பாஸ்வேர்டு எண்ணை கொடுத்து, ரூ.2,700 எடுத்து தருமாறு கூறினார்.
குணசேகரிடம் ஏ.டி.எம். அட்டையை பெற்ற மர்மநபர்களில் ஒருவர், அங்குள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க முயற்சி செய்வது போன்று நடித்தார். பின்னர் அவர், குணசேகரிடம் உங்களது வங்கி கணக்கில் போதிய பணம் இல்லை என்று கூறினார்.
உடனே குணசேகர் தனது மனைவியின் வங்கி கணக்கில் ரூ.30 ஆயிரத்துக்கு அதிகமாக உள்ளதாக கூறினார். இதையடுத்து அந்த நபர், அங்குள்ள மற்றொரு ஏ.டி.எம். எந்திரத்திலும் அட்டையை சொருகி, பணம் எடுப்பது போன்று நடித்தார். பின்னர் அவர், மீண்டும் உங்களது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறி விட்டு, குணசேகரிடம் அட்டையை திருப்பி கொடுத்து விட்டார். இதையடுத்து குணசேகர் தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
இதற்கிடையே குணசேகரின் ஏ.டி.எம். பரிவர்த்தனை துண்டிக்கப்படாததால், அதன் மூலம் 2 எந்திரங்களிலும் மாறி மாறி தலா ரூ.10 ஆயிரமாக மொத்தம் ரூ.30 ஆயிரத்தை 2 மர்மநபர்களும் அபேஸ் செய்தனர்.
இந்த நிலையில் வீட்டுக்கு சென்ற குணசேகர் தனது மனைவியிடம் உனது சேமிப்பு கணக்கில் போதிய பணம் இல்லை என்று கூறினார். அப்போது தங்கம் தனது செல்போனில் பார்த்தபோது, அவரது ஏ.டி.எம். அட்டை மூலம் ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உப்பள தொழிலாளியிடம் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி, நூதன முறையில் ரூ.30 ஆயிரத்தை அபேஸ் செய்த 2 மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story