கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை: மணல் கொள்ளையை தடுக்க கோரிக்கை

மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில், நேற்று காலையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் அலுவலக தலைமை எழுத்தர் நிஷாந்தினியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அந்த மனுவில், விளாத்திகுளம் அருகே கீழ்நாட்டுகுறிச்சி, பல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சவுடு மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்ற சிலர் முறைகேடாக வைப்பாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு லாரிகளில் மணல் அள்ளி செல்வதற்கு இடையூறாக உள்ள பனை மரங்களையும் வெட்டி கடத்தி செல்கின்றனர்.
இதனால் விளாத்திகுளம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் வேளாண்மை தொழிலும் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே இயற்கை வளங்களை பாதுகாத்து, மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி தொகுதி பொருளாளர் தேவராஜ், சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் பாலசுப்பிரமணியன், கயத்தாறு நகர செயலாளர் கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி பசும்பொன் நகர் பகுதி மக்கள் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.
அந்த மனுவில், இலுப்பையூரணி பசும்பொன் நகரில் நவநீதகிருஷ்ணன் என்பவர் கேபிள் டி.வி. ஆபரேட்டராக இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு அவருடைய மனைவி சங்கரேசுவரி கேபிள் டி.வி. ஆபரேட்டர் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் சில அரசு அதிகாரிகள் முறைகேடாக லஞ்சம் பெற்று கொண்டு, அங்கு மற்றொருவரை கேபிள் டி.வி. ஆபரேட்டராக நியமிக்க முயற்சிக்கின்றனர். இதனை கைவிட வேண்டும். சங்கரேசுவரிக்கு ‘செட்-டாப்’ பாக்ஸ் உரிமம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த போராட்டத்தில் அனைத்து கேபிள் டி.வி. ஆபரேட்டர் நலச்சங்க தலைவர் முத்துகிருஷ்ண பாண்டி, பொருளாளர் அப்பாராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story