சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதிகள் நெல்லை மாவட்டத்தில் தொடர வேண்டும்: அமைச்சர் உதயகுமாருக்கு, வைகோ கடிதம்
சங்கரன்கோவில், திருவேங்கடம் வருவாய் வட்டப்பகுதிகள் நெல்லை மாவட்டத்தில் தொடர வேண்டும் என்று அமைச்சர் உதயகுமாருக்கு, வைகோ கடிதம் அனுப்பி உள்ளார்.
நெல்லை,
தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக அரசு கடந்த 18.7.2019 அன்று நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்து உள்ளது. தற்போதைய நெல்லை வருவாய் மாவட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, ஆலங்குளம், வீரகேரளம்புதூர் வருவாய் வட்டப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளின் வளர்ச்சிக்கு புதிதாக தோற்றுவிக்கப்படும் தென்காசி வருவாய் மாவட்டம் வழிவகுக்கும் என்பதால் தென்காசியை தலைமையிடமாக கொண்டு தோற்றுவிக்கப்படும் புதிய மாவட்ட உருவாக்கத்தை வரவேற்கிறேன்.
ஆனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், திருவேங்கடம் வருவாய் வட்டங்களில் உள்ளடங்கி உள்ள குருவிகுளம் ஒன்றியம், மேலநீலிதநல்லூர் ஒன்றியம், சங்கரன்கோவில் நகராட்சி, சங்கரன்கோவில் ஒன்றிய பகுதிகள் தொடர்ந்து நெல்லை வருவாய் மாவட்டத்திலேயே இருந்திடும் வகையில் மாவட்ட பிரிவினையை அமைத்திட வேண்டும். ஏனெனில் இப்பகுதி மக்கள் நெல்லைக்கு வந்து செல்லும் தூரம் குறைவு என்பதுடன் 24 மணி நேரமும், பல வழித்தடங்களில் போக்குவரத்து வசதியும் உள்ளது.
மாறாக தென்காசியில் இருந்து இப்பகுதிகளுக்கு முறையே முழுமையான போக்குவரத்து வசதிகள் கிடையாது. இரவு 9 மணிக்கு மேல் தென்காசியில் இருந்து சங்கரன்கோவில் நகருக்கு கூட பஸ் வசதி கிடையாது. இரண்டு அல்லது மூன்று பஸ்களை பிடித்து சுமார் 2, 3 மணி நேரத்திற்கு மேல் சுற்றிச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படும். இதனால் நூற்றுக்கணக்கான கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
மேற்கண்ட காரணங்களாலும், கல்வி, அரசுப்பணி, மருத்துவ சேவை, வேலைவாய்ப்புகள் அனைத்திற்கும் மேற்கண்ட பகுதி மக்களுக்கு நெல்லையே உகந்ததாக உள்ளது. எனவே சங்கரன்கோவில், திருவேங்கடம் வருவாய் வட்டப்பகுதிகள் தொடர்ந்து நெல்லை வருவாய் மாவட்டத்திலேயே தொடரும் வகையில் மாவட்ட பிரிவினையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story