வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை
நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
களக்காடு,
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ராஜபுதூர் தெருவை சேர்ந்த அப்பாத்துரை என்பவருடைய மகள் சாலினி (வயது 28). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பால்பாண்டி மகன் சசிகுமார் என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். 3 குழந்தைகளும் சாலினிக்கு முதல் பிரசவத்திலேயே பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் சாலினி தனது வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாலினியின் அண்ணன் பாலமுருகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து தனது தங்கையின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இதுபற்றி களக்காடு போலீசில் பாலமுருகன் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் சாலினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு நாங்குநேரி துணை சூப்பிரண்டு இளங்கோவன் வந்து விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முக்கூடல் அருகே உள்ள உடையாம்புளி நாராயணபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகன் அணைக்கரை முத்து (20). கதிர் அறுக்கும் எந்திர டிரைவர். அணைக்கரை முத்து தனக்கு திருணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் வலியுறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பகுதியில் அணைக்கரை முத்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அணைக்கரை முத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கூடலை அடுத்த பாப்பாக்குடி ரெங்கசமுத்திரம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (48). சம்பவத்தன்று இவர் விஷம் குடித்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலையில் முருகன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story