கொடைக்கானல் பகுதியில், அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறைபடுத்த வேண்டும்


கொடைக்கானல் பகுதியில், அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறைபடுத்த வேண்டும்
x
தினத்தந்தி 28 Aug 2019 4:00 AM IST (Updated: 28 Aug 2019 2:17 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங் களை வரன்முறைபடுத்த வேண்டும் என்று கலந்தாய்வு கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.

கொடைக்கானல்,

கொடைக்கானல் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 300-க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாழ்வாதாரங்களை இழந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே கொடைக்கானலில் கட்டப்பட்டு உள்ள கட்டிடங்களை வரன்முறை படுத்தக்கூடிய சட்டத்தை அரசு இயற்றவேண்டும் என வலியுறுத்தி கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

முன்னாள் நகரசபை தலைவர்கள் குரியன் ஆபிரகாம், கோவிந்தன், ஓட்டல் உரிமையாளர் சங்கத்தலைவர் அப்துல் கனிராஜா, கட்டிட கட்டுமானோர் சங்கத்தை சேர்ந்த செல்வகுமார், தி.மு.க. நகர செயலாளர் முகமது இபுராகீம், ம.தி.மு.க. நகர செயலாளர் தாவுது, மாரியம்மன் திருக்கோவில் தலைவர் முரளி, டவுன் பள்ளிவாசல் தலைவர் காஜாமைதீன், மூஞ்சிக்கல் திருஇருதய ஆலய வட்டார அதிபர் எட்வின் சகாயராஜ், கிறிஸ்தவ கல்லூரி தாளாளர் சாம் ஆபிரகாம், பீட்டர்ஸ் பள்ளி தாளாளர் சாம்பாபு உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

இதில் கொடைக்கானல் பகுதி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ‘சீல்’ வைக்கப்பட்ட கட்டிடங்களை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கவேண்டும். கட்டிடங்களை ஒரு முறை வரன்முறைப்படுத்த தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். மேலும் நகரில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், நகரின் குடிநீர் தேவையை நிரந்தரமாக பூர்த்தி செய்ய வேண்டும், வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை விடுத்தனர்.

கூட்டத்தின் முடிவில் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கூறுகையில், புதிய மாஸ்டர் பிளானை அமல்படுத்திய நிலையில் கட்டிடங் களை ஒரு முறை வரன் முறைப்படுத்தும் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு மற்றும் அரசின் தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர், மாவட்ட கலெக்டர் ஆகியோர்களை சந்தித்து முறையிட்டு பொதுமக்களின் வாழ்வாதாரத்தினை எடுத்துக் கூறி மக்கள் அச்சத்தில் இருந்து மீண்டு வாழ்வதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் கொடைக்கானல் பஸ் நிலைய பகுதியில் ரூ.20 கோடி செலவில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படவுள்ளது. இந்த பணியை விரைவில் தொடங்க வலியுறுத்தப்படும். கட்டப்பட்ட கட்டிடங் களை வரன்முறைப்படுத்த நீதிமன்றத்தில் தடை இருந்த போதிலும் மேல்முறையீடு செய்து சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர வலியுறுத்துவோம். கொடைக்கானல் நகரில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தப்படும். அதேபோல அடுக்கம் சாலையை திண்டுக்கல் மாவட்ட எல்லை வரை பணிகள் முடிந்துள்ளன. அதனை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும், என்றார். 

Next Story