பா.ஜனதா- சிவசேனா கட்சியினர் அறிவிப்புகளை வெளியிடுவதில் கில்லாடிகள் காங்கிரஸ் தலைவர் கிண்டல்


பா.ஜனதா- சிவசேனா கட்சியினர் அறிவிப்புகளை வெளியிடுவதில் கில்லாடிகள் காங்கிரஸ் தலைவர் கிண்டல்
x
தினத்தந்தி 28 Aug 2019 3:00 AM IST (Updated: 28 Aug 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

ஆளும் பா.ஜனதா- சிவசேனா கட்சியினர் அறிவிப்புகளை வெளியிடுவதில் கில்லாடிகள் என காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட் கிண்டலாக கூறினார்.

மும்பை,

சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா கட்சி சார்பில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் “மகாஜனாதேஷ்” என்ற பெயரில் ரத யாத்திரையை நடத்தி வருகிறார்.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் யாத்திரையை தொடங்கிய அதே அமராவதி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் “போல் கோல் யாத்ரா” என்ற பெயரில் பதில் பிரசார பயணத்தை தொடங்கி உள்ளது. இதில் ஆளும் பா.ஜனதா அரசின் பொய் பிரசாரத்தை அம்பலப்படுத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தொடங்கிய யாத்திரையில் மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட் பேசியதாவது:-

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அறிவித்தது. ஆனால் அது முறையாக வழங்கப்படவில்லை. அடுத்த மாதம் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், விவசாயிகளின் துயரை துடைக்க இந்த அரசு தவறிவிட்டது. பயிர் கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகளின் வலியை குறைக்க தவறிவிட்டது.

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக சிவசேனா மும்பையில் போராட்டம் நடத்துகிறது. ஆனால் சட்டசபையில் இந்த விவகாரம் குறித்து அந்த கட்சி தலைவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

மாநிலத்தில் வேலையின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், கட்டுமான அதிபர்களுக்கும் சாதகமாக செயல்படுவதில் தான் இந்த அரசு ஆர்வமாக உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் அரசு அறிவித்த ஒரு திட்டத்தை கூட நிறைவேற்றவில்லை. புதிய அறிவிப்புகளை வெளியிடுவதில் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சியினர் கில்லாடிகள். ஆனால் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மோசமாக செயல்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story