திருப்பத்தூர் மாவட்ட தலைமையிடம் எங்கு அமையும்? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படும் நிலையில் புதிதாக உருவாக்கப்படும் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு எங்கு தலைமையிடம் அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜோலார்பேட்டை,
இரண்டு நூற்றாண்டுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்ட தலைமையிடமாக செயல்பட்டு வந்துள்ளது. அதன்கீழ்தான் சேலம், வேலூர் போன்ற பகுதிகள் இருந்துள்ளன. திருப்பத்தூர், மாவட்ட தலைமையிடமாக செயல்பட்டபோது அங்கு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட அலுவலகத்தில்தான் இப்போது சப்-கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்தைபோல் சீதோஷ்ண நிலை இல்லாமல் தமிழகம் வெப்பமண்டலத்தில் இருந்ததால் குளிர்பிரதேசங்களை தேடிச்செல்வர். அந்த வகையில் திருப்பத்தூரில் மாவட்ட தலைமையிடம் இருந்தபோது அவர்கள் ஏலகிரி மலைக்கு சென்று தங்குவர்.
அதன்பின்னர் சேலம் மாவட்ட தலைநகராக மாற்றப்பட்டபோது அங்கும் குளிர்பிரதேசமான ஏற்காட்டிற்கு செல்வர். அவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் ரெயில் நிலையம் தமிழகத்தின் மற்ற ரெயில்நிலையங்களை விட வித்தியாசமான முறையில் அழகிய முறையில் கட்டப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட தலைநகருக்குரிய அனைத்து அந்தஸ்துகளும் திருப்பத்தூரில் உள்ளது. அருகிலேயே மாநிலத்தின் பெரிய ரெயில் நிலையங்களில் ஒன்றான ஜோலார்பேட்டை ரெயில் நிலையமும் உள்ளது.
இதனால்தான் திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு மீண்டும் மாவட்டம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். அதற்கு ஒப்புதல் அளிக்கும் விதமாகத்தான் சுதந்திர தின விழாவின்போது திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி தாலுகாக்கள் சேர்க்கப்படுவது உறுதியாக தெரிகிறது. மேலும் சில பகுதிகளும் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. புதிய மாவட்டத்துக்கு வரவேற்பும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் மாவட்ட தலைமையிடம் எங்கு அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது தொடர்பாக கருத்து கேட்பு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளது.
ஏற்கனவே ஆம்பூர் பகுதி பிரமுகர்கள் திருப்பத்தூர் மாவட்ட தலைமை அலுவலகத்தை ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். சிலர் பொன்னேரி, வாணியம்பாடி இடையே அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஏனெனில் வாணியம்பாடி வரை உள்ள இடங்கள் பெங்களூரு செல்லும் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளன.
அதன்பிறகு இரு வாகனங்கள் செல்லும் அளவுக்கு உள்ள சாலை வழியாகத்தான் திருப்பத்தூர் செல்ல வேண்டும். இதே பாதை வழியாகத்தான் சேலம் வரை வாகனங்கள் செல்கின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம்-திருப்பத்தூர் வழியாக வாணியம்பாடி வரை உள்ள சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கான பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த அறிகுறியுமே இல்லை.
எனவே மாவட்ட தலைநகராக திருப்பத்தூர் உருவாக உள்ள நிலையில் சேலம்-திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையை நான்குவழிச்சாலையாக மாற்றும் பணியையும் உடனடியாக தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
மாவட்ட தலைமையிடம் உருவாக்கப்படும்போது கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட தலைமை அலுவலகங்கள், ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்பட அனைத்து அலுவலகங்களும் அமைய வேண்டும். தாராளமான இடவசதி உள்ள இடம் இதற்கு தேர்வு செய்யப்படலாம். இதற்காக அரசு புறம்போக்கு நிலங்களை கண்டறியும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வாணியம்பாடி, ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள இடங்கள் சர்வே செய்யப்படலாம் என தெரிகிறது. மேலும் ஜோலார்பேட்டை பகுதியில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடங்களும் உள்ளன. அந்த இடத்தையும் பெறுவதற்கு மாநில அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் எந்தெந்த பகுதி சேர்க்கப்பட வேண்டும் என முடிவு செய்வதற்காக நாளை வாணியம்பாடியில் கருத்து கேட்பு கூட்டம் நடக்க உள்ளது. அதேபோல் வேலூர் அடுக்கம்பாறையிலும் கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது. அதில் பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகள் அறிக்கையாக அரசிடம் அளிக்கப்பட உள்ளது. அதன்பிறகே மாவட்டம் உருவாக்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது.
Related Tags :
Next Story