பெரம்பூரில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவிலை இடித்து அகற்றியதால் பரபரப்பு
பெரம்பூர் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கோவிலை பொக்லைன் எந்திரங்கள் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திரு.வி.க. நகர்,
பெரம்பூர் முதல் ரெட்டேரி வரை 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையின் இருபக்கமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சீரமைக்க ஐகோர்ட்டு மாநகராட்சிக்கு சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பாதிப்பு இல்லாத வகையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் பெரம்பூர் அடுத்த வீனஸ் அருகே உள்ள 120 வருட பழமை வாய்ந்த தண்டு மாரியம்மன் கோவிலை அகற்ற அதிகாரிகள் திட்டமிட்டனர்.
போலீசார் குவிப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் உதவி கமிஷனர்கள் சுரேந்தர், விஜய் ஆனந்த், செம்பேடு பாபு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய இந்து சத்தியசேனா அமைப்பினர் 30-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மாநகராட்சியின் திரு.வி.க. நகர் மண்டல அதிகாரி ஆலன் சுனேஜா தலைமையில், 50-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் 3 பொக்லைன் எந்திரங்கள் மற்றும் 2 லாரிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
கோவில் இடிப்பு
அதைத்தொடர்ந்து கோவிலில் இருந்த சிலைகள் அகற்றப்பட்டு கோவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அகற்றப்பட்ட சிலைகள் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கோவிலை இடித்து அகற்றிய மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து, கோஷமிட்ட இந்து சத்தியசேனா அமைப்பினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story