‘டாஸ்மாக்’ மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் சென்னையில் 27 பேர் மனு அளித்தனர்


‘டாஸ்மாக்’ மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் சென்னையில் 27 பேர் மனு அளித்தனர்
x
தினத்தந்தி 28 Aug 2019 4:45 AM IST (Updated: 28 Aug 2019 3:49 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. சென்னையில் 27 பேர் மனு அளித்தனர்.

சென்னை,

‘டாஸ்மாக்’ கடைகள் குறித்த புகார்கள் தெரிவிக்கும் வகையில் அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-ம் செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் என்று “டாஸ்மாக்” மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், தமிழகம் முழுவதும் ‘டாஸ்மாக்’ மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் நேற்று நடந்தது. சென்னையில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் மாவட்ட மேலாளர்கள் எஸ்.தங்கதுரை (சென்னை வடக்கு), எஸ்.எம்.முருகன் (சென்னை தெற்கு), ஜெயந்தி (சென்னை மத்தியம்) ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.

வாடகை பணம் நிலுவை

இதில் இடம்மாறுதல், பணியமர்த்தல் தொடர்பாக ‘டாஸ்மாக்’ பணியாளர்கள் சிலர் மனுக்கள் வழங்கினர். தண்டையார்பேட்டையை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண் தனக்கு சொந்தமான நிலத்தில் அனுமதித்திருந்த ‘டாஸ்மாக்’ கடையின் மூலம் மாதந்தோறும் வரும் வாடகை பணம் 3 ஆண்டுகளாக வரவில்லை, அந்த ‘டாஸ்மாக்’ கடையை அகற்றி நிலத்தை மீட்டுத்தரக்கோரியும் மனு அளித்தார்.

பார் வாடகையை 5 சதவீதம் உயர்த்தவேண்டும், பார்களுக்கான டெண்டர் அறிவிப்பை விரைவில் அறிவிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மது கூட கட்டிட உரிமையாளர் நல சங்க தலைவர் அன்புசெல்வன் மனு அளித்தார். அதேபோல ‘டாஸ்மாக்’ பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கக்கோரி ‘டாஸ்மாக்’ எஸ்.சி., எஸ்.டி. சங்கம் சார்பில் மனு வழங்கப்பட்டது.

27 மனுக்கள்

காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் காலை 11 மணிக்கு நிறைவடைந்தது. இதில் சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் 5 மனுக்களும், சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் 4 மனுக்களும், சென்னை மத்திய மாவட்டம் சார்பில் 18 மனுக்களும் என 27 மனுக்கள் பெறப்பட்டன.

Next Story