கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்த வலியுறுத்தி; சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலை நிறுத்தம்
கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்த வலியுறுத்தி சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
அரசு டாக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும், நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, டாக்டர் பணியிடங்களை கூடுதலாக ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் டாக்டர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாகவும் அரசு டாக்டர்கள் கூட்டமைப்பினர் அறிவித்து இருந்தனர்.
இதையொட்டி நேற்று சேலம் அரசு தலைமை மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆஸ்பத்திரி வளாகம் முன்பு அமர்ந்து கோரிக்கைகள் குறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் விளக்கம் அளித்து பேசினர்.
போராட்டம் குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-
தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வரும் டாக்டர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய கூடுதல் ஊதிய உயர்வு இன்னும் வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு 800 அரசு டாக்டர்கள் பணியிடம் குறைக்கப்பட்டு உள்ளது. ஆனால் நோயாளிகள் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்து உள்ளது.
இதனால் அரசு டாக்டர்களுக்கு பணிச்சுமை அதிகம் ஏற்பட்டு உள்ளது. அதன்படி அரசு டாக்டர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகிறோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல கட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று (நேற்று) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். வேலை நிறுத்த போராட்டத்தால் சேலம் தலைமை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று வெளிப்புற நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால் அறுவை சிகிச்சை, இருதய சிகிச்சை, குழந்தைகள் சிகிச்சை பிரிவில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story