வாழப்பாடியில், மண்எண்ணெய் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல்
வாழப்பாடியில் மண்எண்ணெய் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாழப்பாடி.
வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் 5 ஆயிரத்து 230 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு வாழப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வளாகத்தில் உள்ள, மண்எண்ணெய் வழங்கும் நிலையத்தின் மூலம் மாதந்தோறும் மண்எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று காலை மண்எண்ணெய் வாங்கி செல்ல திரளான பெண்கள் மண்எண்ணெய் வழங்குமிடத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மாலை நேரமாகியும் பெரும்பாலானோருக்கு மண்எண்ணெய் வினியோகிக்கவில்லை. இதனால் காலை முதல் காத்திருந்த பெண்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த பெண்கள் மண்எண்ணெய் வழங்கக்கோரி சேலம்-கடலூர் பிரதான சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி தாசில்தார் ஜாகீர் உசேன் மற்றும் போலீசார், வருவாய்த்துறை மற்றும் உணவுப்பொருள் வினியோக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story