முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்வு முகாம்: தண்ணீரை வீணடிக்காமல் சேமிக்க வேண்டும் - கலெக்டர் பேச்சு
தண்ணீரை வீணடிக்காமல் சேமிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு முகாமில் கலெக்டர் கந்தசாமி பேசினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை தாலுகா மேல்பாலானந்தல் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்ட முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்வு முகாம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,072 கிராமப் பகுதிகளில் வருகிற 31-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இதில் பொதுவான மற்றும் தனிப்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது.
இந்த கோரிக்கை மனுக்கள் மீது ஒரு மாத காலத்தில் பரிசீலனை மேற்கொண்டு தகுதி வாய்ந்த நபர்களுக்கு தாலுகா வாரியாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. இங்கு நடைபெற்ற முகாமில் 211 பேர் மனுக்கள் அளித்துள்ளனர். பொது பிரச்சினையாக கால்நடை மருந்தகம் அமைத்திடவும், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித் தருமாறும் கோரிக்கை வைத்தனர். இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரி, குளங்கள், ஊரணிகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரி புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 85 சதவீத பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதற்காக அரசு மூலம் பொதுமக்கள் பங்களிப்புடன் மழைநீர் சேகரிப்பு, நீர்நிலைகள் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கினால் தான் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
தண்ணீரை வீணடிக்காமல் சேமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வில்சன்ராஜசேகர், தாசில்தார் அமுல் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 தாலுகாக்களில் உள்ள 1,072 கிராமங்களில் நேற்று 14 ஆயிரத்து 419 பேரிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
Related Tags :
Next Story