ராசிபுரம், எருமப்பட்டி பகுதிகளில், பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது
ராசிபுரம், எருமப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராசிபுரம்,
ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ராதா (வயது 36). இவர் கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி ராசிபுரம் அருகேயுள்ள பைபாஸ் சாலையில் அணைப்பாளையம் என்ற இடம் அருகே சென்றபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 6¼ பவுன் எடையுள்ள தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பித்து சென்றனர்.
இதுபற்றி அவர் ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவின்படி, ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் மர்ம நபர்களை வலைவீசி தேடிவந்தனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் ராசிபுரம் சேந்தமங்கலம் பிரிவு ரோடு அருகிலுள்ள தனியார் பள்ளி அருகே தணிக்கையில் ஈடுபட்டு இருந்தபோது, பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களை தனிப்படை போலீசார் மடக்கி நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் இருவரும் ராதாவிடமிருந்து 6¼ பவுன் எடையுள்ள தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து கரூர் வீரராக்கியம் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் நவீன் என்கிற குமரவேல் (24), கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்த தங்கவேல் மகன் எலி என்கிற ஜோகிந்தர் (20) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இவர்கள் நல்லிபாளையம், எருமப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் பெண்களிடம் நகைகளை பறித்துச்சென்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 30 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.
இவர்கள் மீது ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம் 1-ல் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் ஜெயந்தி இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதன் பேரில், இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக கைது செய்யப்பட்ட நவீன் குளியலறையில் தவறி விழுந்ததில் அவனது கை எலும்பு முறிந்தது. அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story