மாவட்டம் முழுவதும், அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் - 400 பேர் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று சுமார் 400 அரசு டாக்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்,
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். பட்டமேற்படிப்பு முடித்த அரசு மருத்துவர்களுக்கு கலந்தாய்வு மூலம் தேவையான இடங்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு டாக்டர்கள் ஈடுபட்டனர். இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். அவசர சிகிச்சை மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்க செயலாளர் ரகுகுமரன், இந்திய மருத்துவ சங்கத்தின் நாமக்கல் கிளை தலைவர் டாக்டர் ரங்கநாதன் உள்ளிட்ட டாக்டர்கள் கோரிக்கை பேனரை ஏந்தியவாறு சிறிது நேரம் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இது குறித்து டாக்டர் ரகுகுமரன் கூறியதாவது:-
சென்னையில் எங்கள் கூட்டமைப்பை சார்ந்த 6 பேர் 5-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் உடல் நிலை மிகவும் மோசமாக இருக்கின்ற காரணத்தால் உடனடியாக அரசு தலையிட்டு எங்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் நேற்று ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் என மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் சுமார் 400 டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story