ரூ.1 லட்சம் செலுத்தினால் தினமும் 2,500 ரூபாய் தருவதாகக்கூறி ஆன்லைன் வர்த்தகம் நடத்தி ரூ.10 கோடி மோசடி
ரூ.1 லட்சம் செலுத்தினால் தினமும் 2 ஆயிரத்து 500 ரூபாய் தருவதாகக்கூறி ஆன்லைன் வர்த்தகம் நடத்தி ரூ.10 கோடி மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கே.என்.பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் (வயது 30), கொண்டப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஆனந்தகுமார் (37), பவானி அருகே உள்ள ஆண்டிப்பாளையத்தை சேர்ந்த பிரபாகரன் (37), புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (35) ஆகியோர் ஒன்று சேர்ந்து மூலிகை மருந்து தயாரிக்கும் நிறுவனம் நடத்தினர்.
இந்த நிறுவனத்தை சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை வனத்துறை சந்தன கிடங்கு கிழக்கு வீதியில் உள்ள வீட்டில் வைத்து அவர்கள் நடத்தி வந்தனர்.
பணம் கொடுக்கவில்லை
இந்த நிலையில் 4 பேரும் சேர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் வர்த்தகம் என்ற புதிய திட்டத்தை தொடங்கினர். அதன்படி இந்த திட்டத்தில் ரூ.1 லட்சம் செலுத்துபவர்களுக்கு தினமும் 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தை நம்பி ஈரோடு, கோவை, திருப்பூர், தூத்துக்குடி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்தனர். இதைத்தொடர்ந்து பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு தினமும் ரூ.2 ஆயிரத்து 500 வீதம் வழங்கப்பட்டது. மேலும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சில வாரங்களுக்கு பின்னர் அந்த நிறுவனத்தினர் பணத்தை முறையாக கொடுக்கவில்லை என தெரிகிறது. பணம் இன்று தரப்படும், நாளை தரப்படும் என நிறுவனம் சார்பில் முதலீடு செய்தவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும் பணம் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி பணத்தை முதலீடு செய்தவர்கள் சத்தியமங்கலத்தில் உள்ள அந்த நிறுவனத்துக்கு சென்றனர். அப்போது அந்த நிறுவனம் பூட்டப்பட்டு கிடந்ததுடன், நிறுவனத்தை நடத்தி வந்தவர்களை தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லை.
ரூ.10 கோடி மோசடி
இதைத்தொடர்ந்து பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மனைவி மகாலட்சுமி உள்பட பலர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ‘தங்கராஜ், ஆனந்தகுமார், பிரபாகரன், பிரகாஷ் ஆகியோர் ரூ.1 லட்சத்துக்கு தினமும் 2 ஆயிரத்து 500 ரூபாய் தருவதாகக்கூறி 1,000-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.10 கோடி மோசடி செய்தது,’ தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
கைது
இதில் ஆண்டிபாளையத்தை சேர்ந்த பிரபாகரனை போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரபாகரன் கொடுத்த தகவலின் பேரில் மூலிகை மருந்து தயாரித்து கொடுத்த தங்க ராஜின் தந்தை துரைசாமி (55), முதலீட்டாளர்களுக்கு காசோலை வழங்கியதாக வடக்குப்பேட்டையை சேர்ந்த பொன்னுசாமி (40) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள தங்கராஜ், ஆனந்த குமார், பிரகாஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story