திருப்பூரில் பரபரப்பு: குறைதீர்க்கும் முகாமில் கோரிக்கை மனுவை அதிகாரிகள் வாங்க மறுத்ததால் சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்


திருப்பூரில் பரபரப்பு: குறைதீர்க்கும் முகாமில் கோரிக்கை மனுவை அதிகாரிகள் வாங்க மறுத்ததால் சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்
x
தினத்தந்தி 29 Aug 2019 4:00 AM IST (Updated: 28 Aug 2019 7:57 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் பொம்மநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கோரிக்கை மனுவை வாங்க அதிகாரிகள் மறுத்ததால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அனுப்பர்பாளையம்,

தமிழக முதல்–அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் திருப்பூர் மாநகராட்சி 2–வது மண்டலத்திற்குட்பட்ட பொம்மநாயக்கன்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் மனு கொடுப்பதற்காக விக்னேஷ்வராநகர், கே.பி.நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் முகாம் நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் தங்களது பகுதியில் கழிவுநீர் கால்வாய், தார்சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அடங்கிய கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் கொடுக்க சென்றனர். அப்போது பொதுமக்கள் மொத்தமாக வர வேண்டாம் என்றும், குறிப்பிட்ட சிலர் மட்டும் வந்து மனு கொடுக்குமாறும் கூறி, மனுவை அதிகாரிகள் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னரே பொதுமக்களிடம் இருந்து மனுவை, அதிகாரிகள் பெற்று கொண்டனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–

 எங்கள் பகுதியில் 1000–க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் ஏராளமான தொழில் நிறுவனங்களும் இயங்கி வருகிறது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதிக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் வீதிகளில் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தார்சாலை வசதி இல்லாத காரணத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போதிய தெருவிளக்குகள் இல்லாமையால் இரவு நேரங்களில் பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. எனவே உடனடியாக கழிவுநீர் கால்வாய், தார்சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கப்பட உள்ளதால் அந்த பணி முடிந்த பிறகு கால்வாய் மற்றும் தார்சாலை அமைத்து தரப்படும் என்றும், விரைவில் தெருவிளக்குகள் அமைத்து கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். பின்னர் அங்கு சென்ற முன்னாள் கவுன்சிலர் பட்டுலிங்கத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னரே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story