முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பை ஒப்படைக்காமல் வெளிநாடு சென்றது ஏன்? டி.டி.வி. தினகரன் கேள்வி
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்புகளை ஒப்படைக்காமல் வெளிநாடு சென்றது ஏன்? என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திண்டுக்கல்,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் உள்ளத்தால் இணையவில்லை. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருப்பதால் மட்டுமே இணைந்து இருக்கின்றனர். அது பார்ப்பதற்கு வேண்டுமானால் நெல்லிக்காய் மூட்டை போல் இருக்கலாம். ஆனால் மூட்டையை கட்டியிருக்கும் ஆட்சி என்ற கயிறு அவிழ்க்கப்பட்டால் நெல்லிக்காய் சிதறி விழுவதை போல் இரு அணியினரும் சிதறி ஓடிவிடுவார்கள்.
வெளிநாட்டு தொழில் முதலீட்டாளர்களை தமிழகத்துக்கு ஈர்க்கும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். உண்மையிலேயே அவர் தனது பயணத்தின் மூலம் அன்னிய முதலீடுகளை ஈர்த்தால் மகிழ்ச்சியடைவேன். மேலும் மக்களும் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் அவரின் பயணம் எதற்காக என்பது பயணம் முடிந்து அவர் திரும்பி வந்த பிறகு தான் தெரியவரும்.
பொதுவாக முதல்-அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, தனது பொறுப்பில் ஒருவரை நியமனம் செய்துவிட்டு செல்வார்கள். ஆனால் இங்கே, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பொறுப்பை யாரிடமும் ஒப்படைத்து செல்லாதது ஏன்?. பயப்படுகிறாரா? இது அவருடைய கட்சிக்காரர்களை அவரே நம்பவில்லை என்பதை மக்களுக்கு தெளிவாக காட்டிக்கொடுத்துள்ளது. அதேபோல் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சந்தித்த தோல்வி, மக்களின் நம்பிக்கையை அ.தி.மு.க. இழந்துவிட்டதை காட்டுகிறது. காவிரி தண்ணீரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் கச்சத்தீவை மீட்கவும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நடடிக்கை எடுக்க வேண்டும். ஆறுகள், குளங்களில் கோடைகாலங்களில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்வது வழக்கம். ஆனால் மழை பெய்து அணைகளில் தண்ணீர் திறக்கப்படும் சமயத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுவது தண்ணீரை வீணாக்கும் செயலாகவே கதப்படுகிறது. காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அனைத்து தரப்பினரின் கருத்தை கேட்டு முடிவு எடுத்திருக்க வேண்டும். பால் விலை உயர்வு பாமர மக்களை நிச்சயம் பாதிக்கும். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story