சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்; 23 பேர் கைது


சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்; 23 பேர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2019 4:15 AM IST (Updated: 28 Aug 2019 11:12 PM IST)
t-max-icont-min-icon

சாலையை சீரமைக்க கோரி உளுந்தூர்பேட்டையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 23 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மறியலால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள சிறுநாகலூர் கிராமத்தில் இருந்து நின்னையூர் கூட்டுரோடு வரையுள்ள சாலையும், வாணியந்தாங்கல்-கூத்தக்குடி இடையே உள்ள சாலையும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலைகளை சீரமைக்க கோரி 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்திலும் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் சேதமடைந்த சாலைகள் காப்புக்காட்டையொட்டி செல்வதாலும், உளுந்தூர்பேட்டை வனச்சரக அலுவலகத்துக்கு சொந்தமான இடத்தில் உள்ளதாலும், வனத்துறையினர் அனுமதி அளித்த பிறகே சாலை சீரமைக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறிவிட்டனர்.

இதனால் கிராம மக்கள் உளுந்தூர்பேட்டை வனத்துறை அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தனர். ஆனால் சாலையை சீரமைக்க வனத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. இதனால் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரியும், வனத்துறை அதிகாரிகளை கண்டித்தும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டெல்லி பாபு தலைமையிலான கட்சியினர் நேற்று காலை உளுந்தூர்பேட்டை அருகே சிறுநாகலூர்- செம்பியன் மாதேவி சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராமநாதன், பாலச்சந்தர் ஆகியோர் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், நாங்கள் சாலையை சீரமைக்க கோரி பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி சிறுநாகலூர்- செம்பியன்மாதேவி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் சேதமடைந்த 2 சாலைகளையும் உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 23 பேரை கைது செய்து, வேனில் ஏற்றி அதே பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் டெல்லி பாபு தலைமையில் கட்சியினர் மற்றும் கிராம மக்கள், மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்கப்போவதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சிறுநாகலூர்-செம்பியன் மாதேவி சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story