‘மல்டி ஸ்பெஷாலிட்டி’ அந்தஸ்தில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரூ.67¾ கோடி செலவில் நவீனப்படுத்தப்படுகிறது - எஸ்.செம்மலை எம்.எல்.ஏ. தகவல்


‘மல்டி ஸ்பெஷாலிட்டி’ அந்தஸ்தில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரூ.67¾ கோடி செலவில் நவீனப்படுத்தப்படுகிறது - எஸ்.செம்மலை எம்.எல்.ஏ. தகவல்
x
தினத்தந்தி 29 Aug 2019 4:45 AM IST (Updated: 29 Aug 2019 12:02 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியை ‘மல்டி ஸ்பெஷாலிட்டி’ அந்தஸ்தில் மாற்றும் வகையில் ரூ.67¾ கோடி செலவில் நவீனப்படுத்தப்பட உள்ளது என்று சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.செம்மலை கூறினார்.

ஈரோடு,

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவரும் மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.செம்மலை தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் செம்மலை எம்.எல்.ஏ. தலைமையில் குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஈஸ்வரன்(பவானிசாகர்), அ.நல்லதம்பி (திருப்பத்தூர்) ஆகியோர் ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர்.

ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை, ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும் சிகிச்சைகள், தினசரி புற நோயாளிகள், உள்நோயாளிகள் எண்ணிக்கை, மருந்தகத்தில் வழங்கப்படும் மருந்துகள், பரிசோதனைகள் குறித்து மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோமதி, தொழுநோய் பிரிவு இணை இயக்குனர் டாக்டர் ரமாமணி, ஈரோடு அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் பிரபாவதி தேவி ஆகியோரிடம் கேட்டு அறிந்தனர்.

அப்போது எம்.எல்.ஏ.க்கள் குழு தலைவர் எஸ்.செம்மலை பேசும்போது கூறியதாவது:-

மருத்துவப்பணியை மக்களுக்கான சேவையாக நினைத்து டாக்டர்கள் முழு மனதுடன் செய்ய வேண்டும். கண்டிப்பாக புறநோயாளிகள் பிரிவில் பணியில் இருக்கும் டாக்டர்கள் சரியான நேரத்துக்கு வரவேண்டும். இதுகுறித்து அனைத்து டாக்டர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்.

ஈரோடு தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வருகிற யாரையும் பிற ஆஸ்பத்திரிகளுக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கும் நிலை இருக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையம், சி.டி.ஸ்கேன் மையம் ஆகியவற்றை பார்வையிட்ட எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் சித்த மருத்துவப்பிரிவினையும் பார்வையிட்டு செயல்பாடுகளை கேட்டு அறிந்தனர்.

பின்னர் எம்.எல்.ஏ.க்கள் குழு தலைவர் எஸ்.செம்மலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரி சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழக அளவில் சிறந்த அரசு ஆஸ்பத்திரிகளில் ஒன்றாகவும் இருக்கிறது. இங்கு ரூ.67 கோடியே 76 லட்சம் செலவில் ‘மல்டி ஸ்பெஷாலிட்டி’ அந்தஸ்தில் ஈரோடு தலைமை அரசு ஆஸ்பத்திரியை நவீனப்படுத்தும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் நிதி ஒதுக்கி உள்ளார். 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட இந்த பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

அடுக்குமாடியாக கட்டப்படும் இந்த புதிய வளாகத்தில் ஒவ்வொரு நோய் பிரிவுக்கும் ஒவ்வொரு தளம் ஒதுக்கப்படும். தற்போது இங்கு போதுமான டாக்டர்கள் இருக்கிறார்கள். சிலர் வேறு அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றுப்பணியாக சென்று இருக்கிறார்கள். இங்குள்ள டாக்டர்களை வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றுப்பணிக்கு அனுப்பக்கூடாது என்று எங்கள் குழு பரிந்துரை செய்யும்.

மேலும், குடிதண்ணீர் தடையின்றி கிடைக்க, ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில் இருந்து தனிக்குழாய் மற்றும் மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டு முழுநேரமும் தண்ணீர் வழங்க தேவையான ஏற்பாடுகளை செய்ய தொகுதி எம்.எல்.ஏ. மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு எம்.எல்.ஏ.க்கள் குழு தலைவர் எஸ்.செம்மலை எம்.எல்.ஏ. கூறினார்.

இந்த ஆய்வின் போது ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, மண்டலக்குழு முன்னாள் தலைவர் ரா.மனோகரன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் மலையாண்டி மற்றும் டாக்டர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக நேற்று ஈரோடு சோலார் பகுதிக்கு சென்ற எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் தொழில் கடன் வாங்கி நல்ல முறையில் முறுக்கு மற்றும் பழக்கடைகள் நடத்தி வரும் 4 நபர்களை சந்தித்து, அவர்களின் கடைகளை பார்வையிட்டு தொழில் குறித்து கேட்டு அறிந்தனர்.

பின்னர் மாலையில் ஈரோடு கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

Next Story