போலீசாருக்கு எழுதிக்கொடுத்த உறுதிமொழி பத்திரத்தை மீறிய இரட்டை சகோதரர்களுக்கு 355 நாட்கள் சிறை தண்டனை


போலீசாருக்கு எழுதிக்கொடுத்த உறுதிமொழி பத்திரத்தை மீறிய இரட்டை சகோதரர்களுக்கு 355 நாட்கள் சிறை தண்டனை
x
தினத்தந்தி 29 Aug 2019 4:30 AM IST (Updated: 29 Aug 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

திருட்டு, அடிதடி உள்பட 16 வழக்குகளில் தொடர்புடைய இரட்டை சகோதரர்கள் போலீசாருக்கு எழுதிக்கொடுத்த உறுதிமொழி பத்திரத்தை மீறியதால் அவர்களுக்கு 355 நாட்கள் சிறை தண்டனை விதித்து கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் உத்தரவிட்டார்.

கோவை,

கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகன்கள் சுரேஷ் (வயது 23), ரமேஷ் (23). இருவரும் இரட்டை சகோதரர்கள். இவர்கள் மீது கோவை செல்வபுரம் உள்பட மாநகரில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு, அடிதடி உள்பட 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதைத்தொடர்ந்து குற்றவியல் நடைமுறை சட்டம் 110(இ) பிரிவின் கீழ் இரட்டை சகோதரர்கள் 2 பேரிடமும் செல்வபுரம் போலீசார் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கினார்கள். அதன்படி ஒரு ஆண்டுக்கு எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபட மாட்டோம் என்று அவர்கள் கடந்த 17-ந் தேதி எழுதிக்கொடுத்தனர்.

ஆனால் உறுதிமொழி பத்திரம் எழுதிக்கொடுத்த மறுநாள் அதாவது 18-ந் தேதியே இருவரும் செல்வபுரம் பகுதியில் ஒருவரை கத்தியால் குத்த முயற்சித்தனர். இது குறித்து அளித்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். ஒரு ஆண்டுக்கு எந்த குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டோம் என்று உறுதிமொழி பத்திரம் எழுதிக்கொடுத்த மறுநாளே அதை இரட்டை சகோதரர்கள் மீறியது பற்றி கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன்பேரில் அதுதொடர்பான விசாரணை போலீஸ் துணை கமிஷனரும், நிர்வாக நீதிபதியுமான பாலாஜி சரவணன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது இரட்டை சகோதரர்கள் சுரேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய 2 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களிடமும், விசாரணை அதிகாரிகளிடமும் துணை கமிஷனர் விசாரணை நடத்தினார். இதில் இரு வாலிபர்களும் உறுதிமொழி பத்திரத்தை மீறியது தெரியவந்தது.

இதைதொடர்ந்து சுரேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் ஒரு ஆண்டு அதாவது 365 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், அதில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 18-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 10 நாட்கள் ஏற்கனவே சிறை தண்டனை அனுபவித்து விட்டதால் மீதி 355 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று துணை கமிஷனர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து அவர்கள் 2 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் 2 பேருக்கும் கோவை கோர்ட்டில் ஜாமீன் கிடைக்காது. சென்னை ஐகோர்ட்டில் தான் ஜாமீன் மனு தாக்கல் செய்து பெற வேண்டும். இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 110(இ) பிரிவின் கீழ் தண்டனை வழங்க மாஜிஸ்திரேட்டுக்கு தான் முன்பு அதிகாரம் இருந்தது. அது தற்போது புறநகரில் கோட்ட வருவாய் அதிகாரிக்கும், மாநகரில் போலீஸ் துணை கமிஷனருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தான் தற்போது இரட்டை சகோதரர்களுக்கு 355 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் கூறியதாவது:-

தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள், ஒருவரால் பொது அமைதிக்கு பங்கம் உருவாகும் நிலை தெரியவந்தால் அதுபோன்றவர்களிடம் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 110(இ) பிரிவின் கீழ் ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபட மாட்டோம் என்று உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்படும். இந்த நாட்டுக்கு அவர்கள் மரியாதை கொடுக்கும் வகையில் இத்தகைய உறுதிமொழி எழுதி வாங்கப்படுகிறது. அவ்வாறு எழுதிக்கொடுத்த பின்னர் நன்னடத்தையுடன் நடந்து கொள்ள வேண்டும். இதற்காக அவர்கள் மீது ஏற்கனவே பதிவான வழக்குகள் ரத்து செய்யப்பட மாட்டாது. அந்த வழக்குகள் கோர்ட்டில் தனியாக விசாரணை நடக்கும். ஆனால் உறுதிமொழி பத்திரத்தை மீறினால் அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும். அதன்படி தான் இரட்டை சகோதரர்களுக்கு 355 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story