இருளஞ்சேரி ஊராட்சியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல்; போக்குவரத்து பாதிப்பு


இருளஞ்சேரி ஊராட்சியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல்; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 29 Aug 2019 4:30 AM IST (Updated: 29 Aug 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

இருளஞ்சேரி ஊராட்சியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் இருளஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது பிளேஸ்தோட்டம். இங்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு மேலாக அதிகாரிகள் சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு சென்று தண்ணீர் பிடித்து வந்தனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள சிலர் கூவம் ஆற்றில் கழிவு நீரை விடுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து அந்த பகுதி மக்கள் பலமுறை கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேலும் அந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய பம்ப் ஆபரேட்டர்கள் நியமிக்கப்படவில்லை. கடந்த முறை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தியும், கழிவு நீர் கூவம் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் எந்த பயனும் ஏற்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை 7 மணியளவில் பூந்தமல்லி- அரக்கோணம் சாலையான பிளேஸ்தோட்டம் பகுதியில் காலிக்குடங்களை கையில் ஏந்தியும், பதாகைகளை கையில் ஏந்தியவாறும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையின் இருபுறத்திலும் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் வேலைக்கு செல்லக்கூடியவர்கள், தொழிற்சாலை ஊழியர்கள் என பலதரப்பட்ட மக்களும் அவதியுற்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், இருளஞ்சேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், ஊராட்சி செயலாளர் சேகர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இனிவரும் காலங்களில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், கூவம் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story