ரெயில் பயணங்களில் திருட்டுபோன 257 பவுன் நகைகள் மீட்பு: உரியவர்களிடம், ஐ.ஜி.வனிதா ஒப்படைத்தார்


ரெயில் பயணங்களில் திருட்டுபோன 257 பவுன் நகைகள் மீட்பு: உரியவர்களிடம், ஐ.ஜி.வனிதா ஒப்படைத்தார்
x
தினத்தந்தி 29 Aug 2019 4:15 AM IST (Updated: 29 Aug 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் பயணங்களில் திருட்டுபோன 257 பவுன் நகைகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

சென்னை,

தமிழ்நாடு ரெயில்வே போலீஸ் சார்பில் நேற்று திருச்சி மற்றும் சென்னை ரெயில்வே போலீசார் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பொருட்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று எழும்பூர் ரெயில்வே கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 233 புகார்தாரர்கள் கலந்துகொண்டு திருடுபோன தங்களது உடைமைகளை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. வனிதா தலைமை தாங்கினார். ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் சந்தோஷ் என்.சந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பாக செயல்பட்டு திருட்டு போன நகைகளை மீட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்கள் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஐ.ஜி. வனிதா கூறியதாவது:-

ரெயில் பயணிகளிடம் இருந்து 2018-19-ம் ஆண்டுகளில் திருடப்பட்ட 257 பவுன் தங்க நகைகள், 336 செல்போன்கள், 3 லேப்டாப்கள் மற்றும் பணம் ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளோம். இந்த திருட்டு வழக்குகளில் 156 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம், ஈரோடு ரெயில்களில் கொள்ளையடித்த மராட்டிய சாமிலி கொள்ளையர்கள் மற்றும் ரெயில் ஏ.சி பெட்டிகளில் பயணிகளிடம் திருடி மலேசியாவில் ஓட்டல் நடத்திய கொள்ளையன் சாகுல் ஹமீது, சுபாங்கர் சக்கரபோர்த்தி ஆகியோர் திருடிய நகைகள் மற்றும் பணத்தை மீட்டு அவர்களை கைது செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருட்டு சம்பவத்தை தடுக்க தமிழ்நாடு ரெயில்வே போலீஸ் சார்பில் 473 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 505 இடங்களில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் சந்தோஷ் என்.சந்திரன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ரெயில்வே சூப்பிரண்டு மகேஷ்வரன் மற்றும் திருச்சி மாவட்ட ரெயில்வே சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் கலந்துகொண்டனர்.

Next Story