கூட்டுறவு சங்க தேர்தல்: அதிகாரியை கண்டித்து தி.மு.க.வினர் சாலைமறியல்; 30 பேர் கைது - நடுவீரப்பட்டில் பரபரப்பு
நடுவீரப்பட்டு கூட்டுறவு சங்க தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரி செயல்படுவதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் அருகே உள்ள நடுவீரப்பட்டில் வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்திற்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் 9 இயக்குனர்கள் பதவிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மனுத்தாக்கல் நடைபெற்றது. இதில் 40 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்தநிலையில் மனுத்தாக்கல் பரிசீலனை செய்த போது ஒரு தரப்பை சேர்ந்த நபர்களின் மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டது. சிலர் மனுக்களை வாபஸ் பெற்றனர். மீதமுள்ளவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் கூட்டுறவுத்துறை தேர்தல் ஆணையரிடம் இதுதொடர்பாக மனு அளித்தனர். அந்த மனுவில் தேர்தல் அதிகாரி ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டதால் எங்களுடைய மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை தேர்தல் அதிகாரிகள் நடுவீரப்பட்டு கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மீண்டும் அதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய தொடங்கினர். அப்போது தி.மு.க.வினர் எப்படி மனு தாக்கல் செய்யப்பட்டதை மீண்டும் மறுபரிசீலனை செய்ய முடியும். இதற்கு யார் அனுமதித்தார்கள். இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆகையால் மீண்டும் புதிய மனு பெறப்பட்டு அதனை பரிசீலனை செய்து தேர்தல் நடத்த வேண்டும் என கூறினார்கள்.
அப்போது தேர்தல் அதிகாரிகள் ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களை மீண்டும் மறுபரிசீலனை செய்து அதன்படி தேர்தல் நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி எங்கள் பணியை மேற்கொள்கிறோம் என தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மனுத்தாக்கல் செய்தவர்கள் மறுபரிசீலனை செய்யக்கூடிய மனுவை எங்கள் முன்னால் பரிசீலனை செய்ய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக எங்களை யாரையும் உள்ளே விடாமல் எப்படி மனு மறுபரிசீலனை செய்ய முடியும் என கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் தேர்தல் அதிகாரிகள் திட்டவட்டமாக யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
இதைதொடர்ந்து தி.மு.க.வினர் மனுக்களை மறுபரிசீலனை செய்யும் இடத்திற்கு செல்ல முயன்றனர். அப்போது அங்கே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க. வினர் தேர்தல் அதிகாரியை கண்டித்து நடுவீரப்பட்டு பஸ்நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதையடுத்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 30 பேரை நடுவீரப்பட்டு போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து அலுவலகத்தில் மனுக்கள் மறுபரிசீலனை செய்யும் பணி நடைபெற்றது. மேலும் நடுவீரப்பட்டு பகுதியில் பதற்றம் நீடிக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story