ரூ.8,425 கோடியில் பட்ஜெட்: முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார்


ரூ.8,425 கோடியில் பட்ஜெட்: முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார்
x
தினத்தந்தி 29 Aug 2019 5:30 AM IST (Updated: 29 Aug 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சட்டசபையில் ரூ.8,425 கோடியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் புதிதாக வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. விபத்தில் சிக்கியவர்களை மீட்போருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு, விவசாயிகள், மீனவர்களுக்கு நிவாரண உதவிகள் போன்ற முக்கிய அம்சங்கள் இடம் பெற்று இருந்தன.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 26-ந்தேதி கவர்னர் கிரண்பெடி உரையுடன் தொடங்கியது.

சட்டசபை நேற்று கூடியதும் 2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான நாராயணசாமி தாக்கல் செய்தார். அப்போது, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரச்சினை எழுப்பினார்கள்.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதையே நிறைவேற்றாத நிலையில் தற்போது வெற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக கூறி சபாநாயகர் இருக்கை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் சிவக்கொழுந்து உத்தரவின்பேரில் சட்டசபையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்தநிலையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த பட்ஜெட் ரூ.8,425 கோடியில் தயாரிக்கப்பட்டிருந்தது. பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. ஆனால் பல்வேறு சலுகைகள், மானிய அறிவிப்புகள் இடம் பெற்று இருந்தன. அதன் விவரம் வருமாறு:-

நோயாளிகளையும், விபத்தில் சிக்கிய நபர்களையும் அவசர மருத்துவ சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதை உறுதி செய்யும்பொருட்டு 108 எண் அவசர ஊர்தி சேவையை புறஒப்படைப்பு முறையில் பெறுவது என அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாலை விபத்தில் சிக்கியோருக்கு உடனடியாக மருத்துவ வசதி கிடைக்கும்படி அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யும் நபருக்கு ரூ.5 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். உடனடி மருத்துவ உதவிக்காக நெரிசல் கொண்ட குறுகிய சாலைகளிலும் விரைந்து சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் ஜி.பி.எஸ். கருவி வசதிகொண்ட அவசர மருத்துவ சிகிச்சை வழங்கும் பயிற்சி பெற்ற நபர்களால் இயக்கப்படும் இருசக்கர மோட்டார் வாகனம் அறிமுகப்படுத்தப்படும்.

புதுவை மாநிலத்தில் தற்போதுள்ள 50 சதவீத மக்கள் வேளாண் தொழிலை சார்ந்து இருக்கும் நிலையில் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் இதன் பங்களிப்பு 7 சதவீதமாக உள்ளது. எனவே விவசாயத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வேளாண் பயிர் உற்பத்தி திட்டத்தின்கீழ் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த இடுபொருள் மற்றும் சாகுபடிக்கு பிந்தைய பொருளட்டு மானியங்களுக்கு மாற்றாக, உற்பத்தி செலவினங்களுக்கான மானியமாக குறுவை, சொர்ணவாரி பருவத்துக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதமும் மற்றும் சம்பா, தாளடி பருவத்துக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதமும் நெல் பயிரிடக்கூடிய அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் என்பது முன்பு இருந்ததைவிட இருமடங்கு உயர்த்தி மானியமாக வழங்கப்படும். இதற்காக அரசுக்கு ரூ.16.15 கோடி கூடுதல் செலவாகும்.

சிறுதானிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதமும், பயறு வகை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் வீதமும் மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.76.72 லட்சம் கூடுதல் செலவாகும்.

மீனவ குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் 61 நாட்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,500-லிருந்து ரூ.6,500 ஆகவும், மழைக்கால நிவாரணம் ரூ.2,500-லிருந்து ரூ.3 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு ரூ.3 கோடி கூடுதல் செலவாகும். 50 வயது முதல் 59 வயது வரையிலான மீனவர்களுக்கான ஓய்வூதியம் ரூ.1,570-ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும், 60 முதல் 79 வயது வரையிலானவர்களுக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2,500 ஆகவும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.3,135ல் இருந்து ரூ.3,500 ஆகவும் உயர்த்தப்படுகிறது. இதனால் அரசுக்கு வருடத்துக்கு சுமார் ரூ.50 லட்சம் கூடுதல் செலவாகும்.

இரும்பு, மரவிசைப்படகு, கண்ணாடி நுண்ணிழை பிளாஸ்டிக் படகு உரிமையாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் பராமரிப்பு செலவு தொகை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாகவும், கண்ணாடி நுண்ணிழை பிளாஸ்டிக் (செவுள் வலை) படகுகளுக்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும். விசைப் படகுகளுக்கு செலுத்த வேண்டிய காப்பீட்டு பிரிமிய தொகையில் 90 சதவீதம் துறையின் மூலம் செலுத்தப்படும்.

மின்பகிர்மான கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தி பெருகிவரும் மின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், சூரியமின் உற்பத்தியை பெருக்கும்பொருட்டும், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் கடன் உதவிபெற ரூ.983 கோடி மதிப்பிலான விவரமான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய மின்சார ஆணையம் தற்போது தொழில்நுட்ப அனுமதி அளித்துள்ளது. மேலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்னூட்டம் மற்றும் மின் பங்கீட்டிற்கு 2022-ம் ஆண்டுவரை பல்வேறு பணிகளை ரூ.550 கோடியே 35 லட்சம் செலவில் மேற்கொள்ள கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

15 ஆயிரம் வீடுகளை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு வீட்டிலும் 1 கிலோவாட் முதல் 3 கிலோவாட்டுக்கு மிகாமல் சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்திட அரசு மானியத்தில் சூரிய மின் தகடுகள் வழங்கும் திட்டம் இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு சுமார் 4.5 கோடி யூனிட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய இயலும். மேலும் இத்திட்டத்தினால் வீடுகளின் மாதாந்திர கட்டணம் ரூ.95-லிருந்து ரூ.400 வரை குறைய வாய்ப்புள்ளது.

காவல்துறையில் தற்போதுள்ள அனைத்து வாக்கிடாக்கிகளையும் டிஜிட்டல் முறையில் நவீனமாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. காவல்துறையை மேம்படுத்த 44 உதவி ஆய்வாளர்கள், 390 காவலர்கள், 200 கடலோர ஊர்க்காவல் படையினர், 265 ஊர்க்காவல் படையினர், 29 டிரைவர்கள் உள்பட இத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மீன்பிடி தொழில் தடையில்லாமல் நடப்பதற்கு, புதுச்சேரி துறைமுகத்தில் 1.23 கனமீட்டர் அளவுக்கு மணலை தூர்வாரும் பராமரிப்பு பணி இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும். மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் சாகர்மாலா திட்டத்தின்கீழ் சுற்றுச்சூழல் குறித்த அடிப்படை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின் புதுச்சேரி துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணி தொடங்கப்படும்.

நேற்றைய கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சுகுமாறன், கோபிகா ஆகியோர் பங்கேற்கவில்லை. காலை 9.30 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கிய முதல்-அமைச்சர் நாராயணசாமி 11.20 மணிக்கு தனது உரையை முடித்துக்கொண்டார்.

Next Story