கோத்தகிரியில், பணம் வைத்து சூதாடிய 20 பேர் கைது - ரூ.1¼ லட்சம் பறிமுதல்
கோத்தகிரியில் பணம் வைத்து சூதாடிய 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனுக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் மேற்பார்வையில் கோத்தகிரி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி கிரீன்வேலி பள்ளிக்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது உறுதியானது. இதைத்தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஊட்டியை சேர்ந்த மணிகண்டன்(வயது 37), மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரபு(35), குன்னூரை சேர்ந்த விவேக்(38), கோத்தகிரியை சேர்ந்த சிவகுமார்(40), காரிராஜன்(49), அப்துல் மஜீத்(51), உசேன்(42), குமார்(39), மற்றொரு குமார்(48), மூர்த்தி(49), மகாலிங்கம்(52), ராஜூ(49), சந்திரசேகர்(33), ராபர்ட்(35), சகாதேவன்(54), கிருஷ்ணராஜ்(52), பாபு(50), தியாகு(35), ராஜா(52) உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம், 19 செல்போன்கள், 2 கார்கள், 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story