குந்தாரப்பள்ளி, அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு


குந்தாரப்பள்ளி, அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 29 Aug 2019 4:15 AM IST (Updated: 29 Aug 2019 3:49 AM IST)
t-max-icont-min-icon

வேப்பனப்பள்ளி ஒன்றியம் குந்தாரப்பள்ளி அரசு பள்ளியில் மாவட்ட கலெக்டர் பிரபாகர் திடீர் ஆய்வு செய்தார்.

வேப்பனப்பள்ளி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் நாயக்கனேரி, நாச்சிக்குப்பம் ஏரிகளை குடிமராமத்து பணிகளின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கலெக்டர் பிரபாகர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் சிவசங்கரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

ஆய்வின் போது கலெக்டர் பிரபாகர் கூறியதாவது:-

வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில், தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான ஏரி, குளங்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வறண்ட நிலையில் உள்ள 10 ஏரிகள், 15 குளங்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. நாச்சிக்குப்பம், நாயக்கனேரி ஏரிகள் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில், தூர்வாரி, கரைகள் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஏரிகளில் உள்ள மதகுகள் சரிசெய்து நீர்வரத்து கால்வாய், நீர் வெளியேற்று கால்வாய்கள் தூர்வாரப்பட்டு மழைக்காலங்களில் ஏரிகளுக்கு வரும் மழைநீர் வீணாகாமல் ஏரிகள், குளங்களில் நிரப்புவதற்கு அனைத்து பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து குந்தாரப்பள்ளி ஊராட்சியில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பிரபாகர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அங்குள்ள அரசு மாதிரிப்பள்ளியில் சத்துணவு கூடத்தை பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்க வைத்திருந்த மதிய உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். இதையடுத்து வி.மாதேப்பள்ளி ஊராட்சி அத்திகுண்டா அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் முன்பருவ கல்விமுறை மற்றும் சத்துணவின் தரம் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

பூதிமடுகு கிராமத்தில் குடிசைப்பகுதியில் வாழும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பசுமை வீடுகள், முதியோர் உதவித்தொகை, சாலை வசதிகள், வீட்டு மனைப்பட்டாக்கள் வேண்டி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரபாகர் தெரிவித்தார்.

Next Story