அங்கன்வாடி மையப்பணியாளர்கள்-மேற்பார்வையாளர்களுக்கு, ரூ.90¼ லட்சத்தில் விலையில்லா செல்போன்கள்


அங்கன்வாடி மையப்பணியாளர்கள்-மேற்பார்வையாளர்களுக்கு, ரூ.90¼ லட்சத்தில் விலையில்லா செல்போன்கள்
x
தினத்தந்தி 29 Aug 2019 4:15 AM IST (Updated: 29 Aug 2019 3:50 AM IST)
t-max-icont-min-icon

அங்கன்வாடி மையப்பணியாளர்கள்-மேற்பார்வையாளர்களுக்கு ரூ.90¼ லட்சத்தில் விலையில்லா செல்போன்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

கரூர், 

கரூர் மாவட்ட சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறையின் சார்பில் அங்கன்வாடிமைய பணியாளர்களுக்கு அங்கன் வாடி மைய செயல்பாடுகள் குறித்து ஆன்லைனில் பதிவேற்றும் பணிக்காக விலையில்லா செல்போன்கள் வழங்கும் நிகழ்ச்சி கரூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, அங்கன்வாடி மையப்பணியாளர்கள்-மேற்பார்வையாளர்களுக்கு விலையில்லா செல்போன்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகளையும், குழந்தைகளுக்கு இணை உணவு வழங்கப்படும் தகவல், கர்ப்பிணிகளுக்கு சத்துமாவு வழங்கப்படுவது குறித்தும் மற்றும் வளரிளம் பெண்களுக்கு சத்தான உணவுப்பொருட்கள் வழங்குவது குறித்துமான பல்வேறு தகவல்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்காக அங்கன்வாடி மைய பணியாளர் களுக்கு இந்த செல்போன்கள் வழங்கப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ் 1052 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் முதன்மை அங்கன்வாடி மையங்கள் 767 மற்றும் குறு அங்கன்வாடி மையங்கள் 285 செயல்பட்டு வருகின்றன. பெண்கள் மற்றும் குழந்தை நல மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் போஷான் அபியான் திட்டமானது பாரத பிரதமரால் கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் உள்ள 1,050 அங்கன்வாடி பணியாளர்கள் 25 மேற்பார்வையாளர்களுக்கும் மேலும், கூடுதலாக 54 செல்போன்களும் என மொத்தம் ரூ.99 லட்சத்து 36 ஆயிரத்து 690 மதிப்பில் 1,131 செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளது.

கிராமப்புறத்தில் உள்ள அடித்தட்டு ஏழை எளிய குழந்தைகளுக்கு தாயாகவும், கர்ப்பிணிகளுக்கு நல்ல தோழியாகவும் இருந்து ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து அவர்களை காக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதே அங்கன்வாடி பணி யாளர்களின் பணியாகும். அந்தவகையில் நீங்கள் நடைமுறைப்படுத்தும் அனைத்துப்பணிகளையும் ஆன்லைனில் பதிவேற்றும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தின் கீழ் செல்போன்கள் வழங்கப்படுகிறது. இதை எவ்வாறு இயக்குவது, எந்த செயலியில் அங்கன்வாடி மைய பணிகளை எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பது குறித்து உங்கள் அனைவருக்கும் விரிவாக எடுத்துரைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறைகளின் வல்லுனர்களால் பயிற்சி வகுப்புகள் நடத்தப் படும்.

வருவாய்த்துறையிலே பிறப்புச்சான்று, இறப்புச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று உள்ளிட்ட 28 வகையான சான்றிதழ்கள் இ-சேவை மையங்களில் கணினி வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த சான்றிதழ்களுக்காக வட்டாட்சியர் அலுவலங்களுக்கு செல்லவேண்டிய நிலை தற்போது இல்லை. அதுமட்டுமல்ல போக்குவரத்துத்துறையில் புதிய முயற்சியாக பேட்டரியால் இயங்கக்கூடிய புதிய பஸ்களை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்கள்.

இவ்வாறாக அனைத்துத் துறைகளும் நவீனமயமாக்கப்பட்டு மக்கள் நலனிற்கான திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிராமப்புறங்களில் பணியாற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களின் பணியையும் நவீனப்படுத்தும் வகையில் இந்த செல்போன்கள் வழங்கப்படுகிறது. இன்றை குழந்தைகள், எதிர்கால இந்தியாவை கட்டமைக்கப்போகின்றவர்கள். அப்படிபட்ட குழந்தைகளுக்கு எந்த வகையிலும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாத வகையில் நீங்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் எல்.கீதா, கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் தலைவர் நெடுஞ்செழியன், தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் சிவசாமி, கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதி செல்வராஜ் மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ் வட்டார அளவிலான குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story