முக்கொம்பு மேலணை வாத்தலையில் இருந்து, புள்ளம்பாடி, அரியலூர் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
முக்கொம்பு மேலணை வாத்தலையில் இருந்து புள்ளம்பாடி, அரியலூர் மாவட்ட பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஜீயபுரம்,
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா முக்கொம்பு மேலணை அணைக்கட்டில் இருந்து திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட புள்ளம்பாடி மற்றும் அரியலூர் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டார். அதன்படி, மாவட்ட கலெக் டர் எஸ்.சிவராசு நேற்று முக்கொம்பு மேலணை வாத்தலையிலிருந்து தண்ணீரை திறந்து விட்டார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்புக் கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன், மண்ணச்சநல்லூர் தாசில்தார் ராஜேஷ் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் எஸ்.சிவராசு கூறியதாவது:-
புள்ளம்பாடி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள் ளது. வாத்தலையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தொடங்கி தொடர்ந்து 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி வாய்க்கால் மூலமாக 22,114 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதில் நேரடியாக 8,831 ஏக்கரும், ஏரி மற்றும் குளங்கள் மூலமாக 13,283 ஏக்கரும் பாசன வசதி பெறும். மேலும் திருச்சி மாவட்டத்தில் 3 ஏரியும், அரியலூர் மாவட்டத்தில் 25 ஏரியும் நிரம்பி பாசன வசதி பெறும். வாத்தலையிலிருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுக்கிரன் ஏரி வரை 100 கி.மீ தூரத்திற்கு தண்ணீர் சென்று பாசன வசதி பெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் திருச்சி மாவட்ட விவசாயத்தின் முதுகெலும்பாகவும், உயிர் நாடியாகவும் விளங்கும் உய்யகொண்டான் வாய்க்காலிலும் நேற்று காலை பெட்டவாய்த்தலை தலைப்பு பகுதியில் உள்ள உய்யகொண்டான் வாய்க்கால் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.
முக்கொம்பு உதவி பொறியாளர் ராஜரத்தினம், பாசன ஆய்வாளர் சுந்தரபாண்டியன் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். உய்யகொண்டான் வாய்க்காலில் வினாடிக்கு 165 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் அணலை, கோப்பு, குழுமணி, சோமரசம்பேட்டை வழியாக புத்தூர் ஆறுகண் குழுமி வழியாக திருச்சி மாநகருக்குள் சென்று தஞ்சை மாவட்டம் வல்லம் வரை செல்கிறது. இப்படி செல்லும் இந்த வாய்க்கால் மூலம் நேரிடையாகவும், மறைமுக பாசனமுமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு பாசன வசதி பெறுகின்றது. உய்யகொண்டான் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, தங்கள் வயல்களில் உழவு பணிகளை தொடங்கி உள்ளனர்.
Related Tags :
Next Story