நூதன முறையில் தங்க சங்கிலியை திருட முயன்ற 2 பேருக்கு தர்ம அடி


நூதன முறையில் தங்க சங்கிலியை திருட முயன்ற 2 பேருக்கு தர்ம அடி
x
தினத்தந்தி 29 Aug 2019 4:00 AM IST (Updated: 29 Aug 2019 3:51 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே நூதன முறையில் தங்க சங்கிலியை திருட முயன்ற 2 பேரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

மணப்பாறை,

மணப்பாறையை அடுத்த ஆமணக்கம் பட்டியைச் சேர்ந்த அஞ்சலை (வயது 25). இவரது வீட்டிற்கு நேற்று வட மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் வந்தனர். அவர்கள், தங்களிடம் நகையை பாலிஷ் செய்து தரும் பொடி இருப்பதாகவும், அதை இலவசமாக முதலில் போட்டு காண்பிப்பதாகவும் கூறினர்.

இதனால், அஞ்சலை தனது கொலுசை கொடுத்துள்ளார். அதை பாலிஷ் செய்து கொடுத்த அவர்கள், தங்க சங்கிலியை கேட்டனர். அவர் அதை கழற்றி கொடுத்தார். சிறிது நேரத்தில், அவர்கள் குடிக்க தண்ணீர் எடுத்துவருமாறு கூறியுள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த அஞ்சலை, சுதாரித்துக்கொண்டு, அவர்களிடம் இருந்து சங்கிலியை பறித்துக்கொண்டு, திருடன், திருடன் என்று சத்தம் போட்டார்.

இதனால் 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, 2 பேரையும் துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் அவர்களை மணப்பாறை போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் 2 பேரும், பீகாரை சேர்ந்த பீபில் குமார், சூரஜ் குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story