மண் எடுப்பதை தடுக்க பொதுமக்களை தூண்டியதாக விவசாயியை தாக்கி கொலைமிரட்டல் - அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு


மண் எடுப்பதை தடுக்க பொதுமக்களை தூண்டியதாக விவசாயியை தாக்கி கொலைமிரட்டல் - அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 29 Aug 2019 4:00 AM IST (Updated: 29 Aug 2019 3:51 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே மண் எடுப்பதை தடுக்க பொதுமக்களை தூண்டியதாக விவசாயியை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குத்தாலம், 

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே கிளியனூர் அகரவல்லம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். அ.தி.மு.க. பிரமுகர். இவர், அதே பகுதியில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள ஒரு குளத்தில் அரசு அனுமதியுடன் மண் எடுத்துள்ளார். கடந்த 24-ந்தேதி கணேசன், பொக்லின் எந்திரம் மூலம் டிராக்டர்களில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததாகவும், அனுமதிக்கப்பட்ட ஆழத்தைவிட பல மடங்கு ஆழமாக மண் எடுத்ததாகவும் கூறி அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும், கணேசனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை எழும் நிலை ஏற்பட்டது.

தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை மற்றும் பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த பிரச்சினைக்கு தரங்கம்பாடி தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என்றும், அதுவரை மண் எடுக்கக்கூடாது என்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தவிட்டார். இதனால் மண் எடுப்பது நிறுத்தப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த கணேசன், அவரது மகன் சேதுராமன் மற்றும் சேகர் ஆகிய 3 பேரும் சேர்ந்து அகரவல்லம் மெயின்ரோட்டை சேர்ந்த மனோகரன் (வயது 59) என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் மண் எடுப்பதை தடுக்க பொதுமக்களை தூண்டியதாக கூறி மனோகரனுக்கு கொலைமிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து விவசாயி மனோகரன் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. பிரமுகர் கணேசன், சேதுராமன், சேகர் ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story