7 மாதம் ஊதியம் வழங்காததை கண்டித்து; பி.எஸ்.என்.எல். தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணா


7 மாதம் ஊதியம் வழங்காததை கண்டித்து; பி.எஸ்.என்.எல். தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணா
x
தினத்தந்தி 29 Aug 2019 4:00 AM IST (Updated: 29 Aug 2019 3:52 AM IST)
t-max-icont-min-icon

பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 7 மாதம் சம்பளம் வழங்காததை கண்டித்து அவர்கள் நேற்று குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர், 

இந்தியா முழுவதும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் இதுவரை 7 மாதம் சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வறுமை காரணமாக இதுவரை 5 தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

7 மாதம் சம்பளம் வழங்கப்படாததால் தொழிலாளர்கள் குடும்பம் நடத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். இந்த நிலையில் அவர்கள் தங்களுக்கு 7 மாதம் சம்பளம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக சம்பளம் வழங்கக்கோரியும் நேற்று குடும்பத்துடன் தர்ணா போராட்டம் நடத்தினர்.

வேலூர் மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இவர்கள் நேற்று வேலூரில் உள்ள டெலிபோன்பவன் அருகில் குடும்பத்துடன் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தர்ணா போராட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சிவலிங்கம், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.பழனி ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார்.

இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் மாரிமுத்து, பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க மாநில உதவி செயலாளர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர் ஜோதி சுதந்திரநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இந்த போராட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரின் குடும்பத்தினர் வறுமையிலும், பட்டினியாலும் அவதிப்படுகிறார்கள். எனவே 7 மாத சம்பளத்தை உடனே வழங்கவேண்டும், இதில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Next Story