சிமெண்டு ஆலைக்கு செல்லும் லாரிகளுக்கு மாற்றுப்பாதை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்
சிமெண்டு ஆலைக்கு சுண்ணாம்பு கற்கள் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு மாற்றுப்பாதை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இடயத்தான்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஈ2ஈ என்ற கம்பெனிக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் இருந்து டால்மியா வஜ்ரம் சிமெண்டு தொழிற்சாலைக்கு தினமும் லாரிகளில் பலமுறை சுண்ணாம்புக் கற்களை ஏற்றி செல்லப்பட்டு வருகிறது. இவ்வாறு சுண்ணாம்பு கற்கள் ஏற்றி செல்லும் லாரிகளால் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதுவரை ஏற்பட்டுள்ள விபத்துகளில் சிலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவ்வாறு செல்லும் லாரிகளால் ஆடு, மாடுகளும் பலியாகி உள்ளன.
எனவே இடயத்தான்குடி கிராம மக்கள், தங்களது கிராமம் வழியாக சிமெண்டு ஆலைகளுக்கு சுண்ணாம்பு கற்களை ஏற்றி செல்லும் லாரிகள் செல்லக்கூடாது என்றும், அந்த லாரிகள் செல்வதற்கு மாற்றுப்பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் பலமுறை அப்பகுதி மக்கள் வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் இதுவரை மாற்றுப்பாதை அமைக்கப்பட வில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டால்மியா சிமெண்டு தொழிற்சாலைக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, இடயத்தான்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி காந்தி (வயது 50) என்பவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சுண்ணாம்புக்கல் ஏற்றிச்சென்ற லாரிகளின் கண்ணாடிகளை உடைத்தனர். மேலும் சுரங்கத்துக்குள் புகுந்து அலுவலகத்தில் இருந்த பொருட்களையும் சூறையாடியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கீழப்பழுவூர் போலீசார் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து இடயத்தான்குடி கிராம மக்கள் ஒன்றுகூடி நேற்று முன்தினம் அரியலூர் தாலுகா அலுவலகத்தில் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி மனு அளிக்க சென்றனர். அப்போது அங்கு நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் சுண்ணாம்புக்கல் ஏற்றிச் செல்லும் லாரிகள் செல்வதற்கு மாற்றுப்பாதை அமைத்து தரவேண்டும், லாரிகள் கிராமத்திற்குள் வரக்கூடாது என கோரிக்கை வைத்தனர். ஆனால் பேச்சுவார்த்தையில் சரியான தீர்வு கிடைக்காததால் கிராம மக்கள் தங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை ஒப்படைத்து விட்டு கிராமத்தை விட்டு வெளியேறுவோம் என்ற அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்து விட்டு புறப்பட்டு சென்றனர்.
மேலும் கிராமத்திற்கு சென்ற அவர்கள் தங்களது ஆதார் அட்டை, ரேஷன் கார்டுகளை தெருவில் தூக்கி வீசி சிறிது நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அந்தப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தின் வழியாக சிமெண்டு ஆலைகளுக்கு செல்லும் லாரிகளை இயக்கக் கூடாது. அவைகள் சென்று வர மாற்றுப்பாதை அமைக்க வேண்டும். இல்லையெனில் ஒட்டுமொத்த கிராம மக்களுக்கு மாற்று இடம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
Related Tags :
Next Story