பாளையங்கோட்டையில், வருங்கால வைப்பு நிதி ஊழியர்கள் வேலை நிறுத்தம்


பாளையங்கோட்டையில், வருங்கால வைப்பு நிதி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 29 Aug 2019 4:15 AM IST (Updated: 29 Aug 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் வருங்கால வைப்பு நிதி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

அகில இந்திய வருங்கால வைப்புநிதி தொழிலாளர் சம்மேளனம் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடந்தது. பாளையங்கோட்டையில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அறிவியல்பூர்வமான வேலைகளை ஒதுக்க வேண்டும். பணியிட மாற்றத்தில் ஒருமித்த கருத்துக்களை வகுக்க வேண்டும். கருணை அடிப்படையில் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி மறுசீரமைப்பால் மறுக்கப்பட்ட பதவி உயர்வு மற்றும் சம்பள விகிதத்தில் ஏற்படும் வேறுபாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

தொடர்ந்து வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முன்பு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்மேளன பொருளாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். செயல் தலைவர் முத்துக்குமரன், பொதுச்செயலாளர் கிருபாகரன், துணை தலைவர் மீனாட்சி சுந்தரம், கிளை செயலாளர் ராஜேஸ்வர சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, “எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறோம். கடந்த 1-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை அகில இந்திய அளவில் வருங்கால வைப்பு நிதி ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து பணியாற்றினார்கள். மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தற்போது வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.

போராட்டத்தில் வருங்கால வைப்பு நிதி தொழிலாளர் சம்மேளன ஊழியர் சங்க நிர்வாகிகள் ராஜன், முத்துச்சாமி, முத்துராமன், ராஜாபிரபுதாஸ், சுஜாதா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story