முன்குறுவை சாகுபடிக்கு, அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு


முன்குறுவை சாகுபடிக்கு, அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 29 Aug 2019 4:15 AM IST (Updated: 29 Aug 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

முன்குறுவை சாகுபடிக்கு அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி, அடவிநயினார், கருப்பாநதி ஆகிய அணைகளில் இருந்து முன்குறுவை பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள், தமிழக முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் வைத்தனர். அதனை ஏற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேற்கண்ட அணைகளில் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று முன்குறுவை சாகுபடிக்காக மேற்கண்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. கடனாநதி அணையில் இருந்து வினாடிக்கு 125 கனஅடி வீதம் நவம்பர் மாதம் 28-ந் தேதி வரை 90 நாட்களுக்கு 664.60 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன்மூலம் தர்மபுரம் மடம், சிவசைலம், ஆழ்வார்குறிச்சி, மேல ஆம்பூர், கீழ ஆம்பூர், மன்னார்கோவில், திருவாலீஸ்வரம், பிரம்மதேசம், பள்ளக்கால், புதுக்குடி, பனஞ்சாடி, ரங்கசமுத்திரம் ஆகிய கிராமங்களில் உள்ள 3,987.57 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடி பாசன வசதி பெறும். நிகழ்ச்சியில் உதவி பொறியாளர்கள் கணபதி, பேட்டர்சன், நீர்ப்பாசன சங்க நிர்வாகிகள் கண்ணன், ராமகிருஷ்ணன், கசமுத்து, வேலாயுதம், செல்வராஜ் உள்பட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

ராமநதி அணையில் இருந்து வினாடிக்கு 30 கனஅடி வீதம் 90 நாட்களுக்கு 168.03 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன்மூலம் கடையம், மேல கடையம், கோவிந்தபேரி, ஆழ்வார்குறிச்சி, வாகைகுளம், இடைகால், பொட்டல்புதூர், துப்பாக்குடி, அயன் பொட்டல்புதூர், பாப்பான்குளம், ரவணசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் 1,008.19 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடி பாசன வசதி பெறும்.

நிகழ்ச்சியில் ராமநதி உதவி பொறியாளர் முருகேசன், தென்கால் பாசன சங்க தலைவர் பூசைக்கிளி, மார்த்தாண்டபேரி குளம் பாசன சங்க தலைவர் சிங்கக்குட்டி உள்பட நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையில் பாசனத்துக்கு வினாடிக்கு 15 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 7,243 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணை திறப்பு நிகழ்ச்சியில், உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணன், அடவிநயினார் அணை பாசன சங்க தலைவர் செல்லத்துரை, தென்னக நதிகள் இணைப்பு மாநில செயலாளர் ஜாஹிர் உசேன், மேட்டுக்கால் பாசன சங்க தலைவர் அலியார் மற்றும் பாசன சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணைக்கு வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் அப்படியே கார் சாகுபடிக்காக திறக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் ஆனந்த், கருப்பாநதி நீர் பகிர்மான சங்க தலைவர் ரத்தினவேல் பாண்டியன், வைரவன் கால் விவசாய சங்க தலைவர் கருத்தபாண்டி, பெருங்கால் விவசாய சங்க தலைவர் சந்தனபாண்டி, மாவட்ட விவசாய சங்க செயலாளர் கல்யாண சுந்தரம் உள்பட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Next Story