பா.ஜனதா, சிவசேனா கட்சிகளுக்கு இடையேயான, சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் மாற்றம் இல்லை


பா.ஜனதா, சிவசேனா கட்சிகளுக்கு இடையேயான, சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் மாற்றம் இல்லை
x
தினத்தந்தி 29 Aug 2019 4:00 AM IST (Updated: 29 Aug 2019 4:38 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளுக்கு இடையே செய்து கொண்ட தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் மாற்றம் இல்லை என்று உத்தவ் தாக்கரே கூறினார்.

மும்பை,

மராட்டிய சட்டசபைக்கு வருகிற அக்டோபரில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவும், சிவசேனாவும் கூட்டணி வைத்து போட்டியிட்டதை போல, சட்டமன்ற தேர்தலிலும் அந்த கட்சிகள் கூட்டணி வைக்க உள்ளன. இது தொடர்பாக நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே அந்த கட்சிகள் முடிவு செய்து விட்டன. மேலும் சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் சம அளவு தொகுதிகளில் போட்டியிட்டு எஞ்சிய தொகுதிகளை கூட்டணியில் இடம்பெறும் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்று பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா அப்போது கூறியிருந்தார்.

ஆனால் பா.ஜனதா மாநில தலைவரும், மந்திரியுமான சந்திரகாந்த் பாட்டீல், சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை இரு கட்சிகளும் விரைவில் இறுதி செய்யும் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் பா.ஜனதாவும், சிவசேனாவும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளை தங்களது கட்சிகளில் சேர்த்து வருகின்றன. போட்டிப்போட்டுக்கொண்டு மாற்றுக்கட்சியினரை சேர்த்து கட்சியை வலுப்படுத்தி வருவதால், பா.ஜனதா, சிவசேனா கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலை போல தனித்து போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த விவகாரங்கள் குறித்து நேற்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

நாங்கள் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தொகுதி பங்கீடு செய்து கொள்ளப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலின் போதே சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் இறுதி செய்யப்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவும், சிவசேனாவும் தலா 135 தொகுதிகளில் போட்டியிட்டு, எஞ்சிய 18 தொகுதிகளை சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கும் என்று தெரிகிறது.

Next Story