வாடகை தருவதாக கூறி கார்களை கடத்தி விற்று வந்த 3 பேர் கைது - 32 கார்கள் பறிமுதல்


வாடகை தருவதாக கூறி கார்களை கடத்தி விற்று வந்த 3 பேர் கைது - 32 கார்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 Aug 2019 10:15 PM GMT (Updated: 28 Aug 2019 11:08 PM GMT)

மாதவாடகை தருவதாக கூறி கார்களை கடத்தி விற்று வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும்அவர்களிடம் இருந்து 32 கார்களை பறிமுதல் செய்தனர்.

மும்பை,

மும்பையை சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கு கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி 3 பேர் அறிமுகமானார்கள். அப்போது அவா்கள் சந்தோசின் காரை வாடகைக்கு விடும்படி கேட்டனர். இதற்காக மாத வாடகை ரூ.40 ஆயிரம் தருவதாக தெரிவித்தனர். இதனை நம்பிய அவர் அதற்கான ஒப்பந்த சான்றிதழில் கையெழுத்து போட்டு காரை கொடுத்து அனுப்பினார்.

ஆனால் அவர்கள் கூறியபடி சந்தோசுக்கு காருக்கான வாடகை தொகையை வழங்கவில்லை. இதுபற்றி கேட்பதற்காக சந்தோஷ் அவர்களை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால் 3 பேரையும் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் அவர்கள் காருடன் தலைமறைவானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் 3 பேரும் ஆரேகாலனியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவர்களை கைது செய்தனர். விசாரணையில், அவர்களது பெயர் ராஜா, அமித் சாவந்த், லஷ்மிகாந்த் பட்கர் என்பது தெரியவந்தது. இவர்கள் கார் உரிமையாளர்களிடம் இருந்து மாத வாடகை தருவதாக கூறி காரை பெற்றுக்கொண்டு அதனை வேறு மாநிலத்தில் விற்று வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மத்திய பிரதேசத்தில் விற்பதற்காக வைத்திருந்த 32 கார்களை பறிமுதல் செய்தனர்.

Next Story