சந்திரயான்-2 விண்கலத்தின் நிலவு சுற்றுவட்டபாதை 3-வது முறையாக உயர்த்தப்பட்டது - இஸ்ரோ தகவல்


சந்திரயான்-2 விண்கலத்தின் நிலவு சுற்றுவட்டபாதை 3-வது முறையாக உயர்த்தப்பட்டது - இஸ்ரோ தகவல்
x
தினத்தந்தி 28 Aug 2019 11:15 PM GMT (Updated: 28 Aug 2019 11:08 PM GMT)

இன்னும் 10 நாட்களில் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் வகையில், சந்திரயான்-2 விண்கலத்தின் நிலவு சுற்றுவட்டபாதை 3-வது முறையாக நேற்று வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

உலகின் எந்த நாடுகளும் செய்யாத சாதனையை நிகழ்த்த இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) முடிவு செய்தது. அதன்படி நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ தயாரித்தது. இந்த விண்கலமானது கடந்த மாதம் (ஜூலை) 22-ந் தேதி பகல் 2.43 மணிக்கு ‘ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3‘ ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பிறகு விண்கலம் பூமியின் சுற்று வட்டபாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து படிப்படியாக 5 முறை பூமியின் சுற்றுவட்டபாதையில் சந்திரயான்-2 விண்கலத்தின் நிலைகள் உயர்த்தப்பட்டன. இந்த சுற்றுவட்டபாதை உயர்வுகள் தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பூமியின் சுற்றுவட்டபாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி சந்திரயான்-2 விண்கலம் பயணிக்க தொடங்கியது. கடந்த 20-ந் தேதி சந்திரயான்-2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டபாதையை வெற்றிகரமாக அடைந்தது. கடந்த 21-ந் தேதி சந்திரயான்-2 விண்கலமானது 2-வது முறையாக நிலவின் சுற்றுவட்டபாதைக்கு உயர்த்தப்பட்டது. இதையடுத்து நிலவை புகைப்படம் எடுத்து சந்திரயான்-2 விண்கலம் அனுப்பியது.

3-வது முறையாக சந்திரயான்-2 விண்கலத்தின் நிலவு சுற்றுவட்டபாதை நேற்று உயர்த்தப்பட்டது. நேற்று காலை 9.04 மணிக்கு விண்கலத்தில் உள்ள என்ஜினை சமிக்ஞை மூலம் 1,190 வினாடிகள் இயக்கி இந்த சுற்றுவட்டபாதை உயர்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் சந்திரயான்-2 விண்கலமானது நிலவில் இருந்து குறைந்தபட்சம் 179 கிலோமீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 1,412 கிலோமீட்டர் தொலைவிலும் சுற்ற தொடங்கி உள்ளதாகவும், சந்திரயான்-2 விண்கலமானது திட்டமிட்டப்படி செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.

மேலும், இன்று (30-ந் தேதி) மாலை 6 மணி முதல் இரவு 7 மணிக்குள் மீண்டும் நிலவின் சுற்றுவட்டபாதையில் சந்திரயான்-2 விண்கலம் உயர்த்தப்பட உள்ளது. இன்னும் 2 முறை சந்திரயான்-2 விண்கலத்தின் நிலவு சுற்றுவட்டபாதை உயர்த்தப்படுகிறது. அதன்பிறகு சந்திரயான்-2 விண்கலம் நிலவின் இறுதி சுற்றுவட்டபாதையை அடையும். அதாவது நிலவின் மேற்பரப்பில் 100 கிலோமீட்டர் தொலைவில் சந்திரயான்-2 விண்கலம் சுற்றும்.

இந்த வேளையில் வருகிற 2-ந் தேதி விண்கலத்தில் இருந்து லேண்டர் கருவி தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பில் இருந்து அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் தொலைவிலும், குறைந்தபட்சமாக 30 கிலோமீட்டர் தொலைவிலும் சுற்றும். அடுத்தமாதம்(செப்டம்பர்) 7-ந் தேதி லேண்டர் கருவி நிலவின் தென்துருவ பகுதியில் மெதுவாக தரையிறங்கும். இதன்மூலம் இன்னும் 10 நாட்களில் விண்கலத்தில் லேண்டர் கருவி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி சாதனை படைக்க உள்ளது.

லேண்டர் நிலவில் தரையிறங்கிய பிறகு அதில் உள்ள ரோவர் பிரக்யான் தனியாக பிரியும். அதைத்தொடர்ந்து லேண்டரும், ரோவரும் 14 நாட்கள் நிலவை ஆய்வு செய்யும். சந்திரயான்-2 விண்கலமானது ஒரு ஆண்டு தொடர்ந்து நிலவை சுற்றி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story