பெங்களூரு மாநகராட்சியின் புதிய கமிஷனராக அனில் குமார் பொறுப்பு ஏற்பு
பெங்களூரு மாநகராட்சியின் புதிய கமிஷனராக அனில் குமார் நேற்று பொறுப்பு ஏற்றார். ‘திடக்கழிவு மேலாண்மையில் கவனம் செலுத்துவேன்‘ என்று அவர் கூறினார்.
பெங்களூரு,
பெங்களூரு மாநகராட்சி கமிஷனராக 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தவர் மஞ்சுநாத் பிரசாத். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். பெங்களூரு மாநகராட்சியின் புதிய கமிஷனராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அனில் குமார் நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சியின் புதிய கமிஷனராக அனில் குமார் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவரிடம் பெங்களூரு மாநகராட்சியின் முன்னாள் கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் பொறுப்புகளை ஒப்படைத்தார். அதன்பிறகு அனில் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெங்களூரு மாநகராட்சியில் வெளிப்படையான நிர்வாகம் செய்யப்படும். பெங்களூரு நகரை உலகதரத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். திடக்கழிவு மேலாண்மை, ஏரி புனரமைப்பு, முறையாக குடிநீர் வினியோகம் செய்வது போன்றவற்றில் அதிகமாக கவனம் செலுத்தப்படும்.
பொதுமக்களுக்கு நண்பர்களாக மாநகராட்சி நிர்வாகம் செயல்படும். இந்திரா உணவகத்தை தொடர்ந்து நடத்துவதற்கு தற்போதைய நிலையில் 50 சதவீத அளவிலான நிதியை வழங்க வேண்டும் என்று ஏற்கனவே நிதி அமைச்சகத்திடம் கேட்டு உள்ளோம். நிதி கிடைக்கும் என்று நம்புவோம். இந்திரா உணவகம், ஒயிட்டாப்பிங் மற்றும் டெண்டர்சூர் சாலை முறைகேடுகள் பற்றி விசாரிக்க தனிக்கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் மாநகராட்சி கமிஷனர் பொறுப்பில் இருந்து விடுபடும் மஞ்சுநாத் பிரசாத் கூறுகையில், ‘3 ஆண்டுகள் 4 மாதங்களாக பெங்களூரு மாநகராட்சி கமிஷனராக செயல்பட்டேன். இந்த காலக்கட்டத்தில் பெங்களூரு மாநகர மக்களின் குறைகளை தீர்க்கும் நோக்கத்தில் பணியாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. குறைந்த காலக்கட்டத்தில் இந்திரா உணவகங்களை நகர் முழுவதும் விரைவாக அமைத்தது எனது சாதனையாக நினைக்கிறேன். குப்பை பிரச்சினைக்கு 100 சதவீதம் தீர்வு காணப்படவில்லை. இது வருத்தமளிக்கிறது‘ என்றார்.
இதையடுத்து பெங்களூரு மாநகராட்சி மேயர் கங்காம்பிகே, துணை மேயர் பத்ரேகவுடா உள்பட அதிகாரிகள் புதிய கமிஷனர் அனில் குமாருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story