ஆத்தூர் அருகே பரபரப்பு; தண்டவாள கொக்கிகளை பெயர்த்து ரெயிலை கவிழ்க்க சதி? மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
ஆத்தூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் கொக்கிகள் பெயர்த்து எடுக்கப்பட்டதால், ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆத்தூர்,
சேலம் மாவட்டம், ஆத்தூரில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் காட்டுக்கோட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையொட்டி ஊருக்கு ஒதுக்குப்புறமாக ரெயில் பாதை உள்ளது. சேலம்-சென்னை ரெயில், சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரெயில் மற்றும் காரைக்காலில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் ரெயில் ஆகிய ரெயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.
நேற்று நண்பகல் 12.15 மணியளவில் காரைக்காலில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் ரெயில் காட்டுக்கோட்டை கிராமத்தையொட்டி உள்ள ரெயில் தண்டவாளத்தில் வந்தது. அப்போது ரெயில் சக்கரங்களில் இருந்து தடதடவென பலத்த சத்தம் கேட்டதால், என்ஜின் டிரைவர் ரெயிலை மெதுவாக இயக்கினார்.
அவர் ரெயிலில் இருந்தபடி தண்டவாளத்தை உற்றுநோக்கி பார்த்த போது, தண்டவாளங்களை இணைக்கும் வகையில் பொருத்தப்படும் கொக்கிகள் கழற்றி பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தார். இதையடுத்து அவர் ரெயிலை அந்த பகுதியில் சுமார் அரைகிலோமீட்டர் தூரத்திற்கு மெதுவாக இயக்கினார். பின்னர் அங்கிருந்து ஆத்தூர் ரெயில் நிலையத்துக்கு ரெயில் வந்து சேர்ந்தது.
இது குறித்து ரெயில் என்ஜின் டிரைவர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை ஆணையர் ரவீந்திரநாத், ரெயில்வே வழித்தட பொறியாளர் சண்முகம், சேலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், பழனிசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனும் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக வந்த தகவலையடுத்து போலீசார் மாநிலம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். ஆங்காங்கே வாகன தணிக்கை மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனை என்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ரெயில் தண்டவாளத்தில் கொக்கிகளை கழற்றி பெயர்த்து எடுக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. எனவே தீவிரவாதிகள் ரெயிலை கவிழ்க்க நடத்திய சதியா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதையடுத்து சேலம் ‘கியூ‘ பிரிவு போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
காட்டுக்கோட்டை கிராமத்தையொட்டி சுமார் அரைகிலோமீட்டர் தூரத்தில் ரெயில் தண்டவாளத்தில் இருந்து அவற்றை இணைக்கும் 40 கொக்கிகள் கழற்றி பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.18 ஆயிரம் ஆகும்.
இந்த ரெயில் தண்டவாளம் பகுதி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதால் சிலர் மது அருந்தும் இடமாக தண்டவாளத்தை பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. அவ்வாறு வந்த சிலர் நேற்று முன்தினம் இரவு இந்த ரெயில் தண்டவாள பகுதியில் அமர்ந்து மது அருந்தி விட்டு, தண்டவாள கொக்கிகளை திருடிச்சென்று இருக்கலாம் என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அதே நேரத்தில் ரெயில் தண்டவாளத்தில் கழற்றப்பட்ட கொக்கிகள் பொருத்தும் பணி போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்றது. பணி துரித கதியில் முடிக்கப்பட்டதை அடுத்து இந்த தண்டவாளத்தின் வழியாக ரெயில்கள் வழக்கம் போல் நேற்று இயக்கப்பட்டன. அந்த இடத்தில் மட்டும் ரெயில்கள் சற்று வேகம் குறைவாக இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ரெயில் தண்டவாளத்தில் கொக்கிகள் பெயர்த்து எடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story