மாணவர் காவல்படை புதிதாக தொடக்கம்; அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
பள்ளிகளில் மாணவர் காவல்படை புதிதாக தொடங்கப்படுவதுடன் அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி,
பள்ளிக் கல்விக்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதுடன் பல்வேறு மாணவர் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. பள்ளிக் கட்டிடங்களின் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக இந்த நிதி ஆண்டில் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அட்சய பாத்திரம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மதிய சத்துணவு திட்டத்தை இந்த கல்வியாண்டின் இறுதி முதல் நடைமுறைப்படுத்த உள்ளோம். இதனால் புதுச்சேரி பகுதியில் 50 ஆயிரம் மாணவர்கள் பலனடைவார்கள்.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர் அல்லாத ஊழியர் ஒருவர் பள்ளி கட்டிடங்கள் மற்றும் வளாகத்தை பராமரிக்க, பராமரிப்பு மேலாளராக நியமிக்கப்படுவார். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். மேலும் மாணவர் காவல்படை என்ற புதிய திட்டத்தை தொடங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 2, காரைக்கால், மாகி, ஏனாம் தலா ஒரு பள்ளிகள் என 5 பள்ளிகளை தேர்வு செய்து அவற்றை சீர்மிகு பள்ளியாக தரம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அனைத்து நவீன தகவல் தொழில்நுட்ப வசதி மற்றும் ஆய்வகங்களுடன் கூடிய முன்பருவ வகுப்பு முதல் மேல்நிலை வகுப்பு வரை கொண்ட சீர்மிகு பள்ளிகளாக இவை செயல்படும்.
1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் சிறார்களின் தாய்மொழி (தமிழ், மலையாளம், தெலுங்கு) மற்றும் ஆங்கில மொழியில் தனது திறனை மேம்படுத்திக்கொள்ள புதிதாக இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு புதிய வாசிப்பு திட்டம் அனைத்து ஆரம்பப் பள்ளிகளுக்கும் இந்த ஆண்டே விரிவுபடுத்தப்படும்.
மழலையர் முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மன அழுத்தம் மற்றும் சுமையை போக்கிட மகிழ்ச்சியான பாடத்திட்டம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தொழில் முனைவோராக்கும் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்த இரு திட்டங்களும் புதுச்சேரி மாநிலத்தின் 4 பிராந்தியங்களை உள்ளடக்கிய 20 பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும். பின்னர் இத்திட்டம் அனைத்து பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
புதுவை மாநில விளையாட்டு கழகத்தில் பணியாற்றும் விளையாட்டு பயிற்றுநர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.22 ஆயிரமாக உயர்த்தப்படும். மேலும் மூத்த பயிற்றுநர்களின் தொகுப்பு ஊதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
லாஸ்பேட்டையில் உள்ள பல்நோக்கு உள்ளரங்கு அருகில் ரூ.12 கோடி செலவில் 100 படுக்கைகள் கொண்ட இந்திய விளையாட்டு ஆணையத்தின் மகளிர் விடுதி இவ்வருடம் நவம்பர் மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும். இவ்விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் ஆடவர் மற்றும் மகளிருக்கு இடையேயான கைப்பந்து போட்டிகள் அக்டோபர் மாதம் புதுச்சேரியில் நடைபெற உள்ளது.
மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு தினப்படி ரூ.225 ஆக உயர்த்தி வழங்கப்படும். பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். அதன்படி தங்கம் வென்றால் தனி விளையாட்டுக்கு ரூ.25 ஆயிரமும், அணி விளையாட்டுக்கு ரூ.12 ஆயிரமும், வெள்ளி பதக்கம் வென்றால் முறையே ரூ.15 ஆயிரம், ரூ.8 ஆயிரமும், வெண்கல பதக்கம் வென்றால் முறையே ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் சாம்பியன்ஷிப் வென்ற மாணவர்களுக்கான ரொக்கப்பரிசு தனி விளையாட்டுக்கு ரூ.1000-ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும், அணி விளையாட்டுக்கு ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்களை பெறும் பள்ளி, கல்லுரி மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சர், கல்வி அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரின் சிறப்பு விருதுகளும் ரூ.20 ஆயிரம் பணமுடிப்பு வழங்கப்படும்.
உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு வளாகத்தில் ரூ.7 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த செயற்கை தடகளம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தலா ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் இந்திராகாந்தி விளையாட்டு வளாகம், பாகூர், ஏம்பலம், அரியாங்குப்பம், மணவெளி, டி.ஆர்.பட்டினம், காரைக்கால், திருநள்ளாறு, பந்தக்கல், மாகி, சாவித்திரி நகர், குரியம்பேட்டா ஆகிய இடங்களில் இந்த ஆண்டே அமைக்கப்பட உள்ளன. வில்லியனூர், ஏம்பலம், ஊசுடு, அரியாங்குப்பம், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், திருநள்ளாறு, பள்ளூர் ஆகிய இடங்களில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story